இது மோசம் - ஏமாற்றம் : தமிழக அரசுக்கு வலுவான கோரிக்கையை முன்வைத்த பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பெய்து வரும் மழையால், பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைக்கத் தேவையான அளவுக்கு கிடங்குகள் இல்லாதது தான் காரணம் எனும் நிலையில், கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எதிர்பாராத இந்த மழையால் மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் அரசால் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதை தமிழக உணவுத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கானத் தீர்வு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்காக கிடங்கு வசதியை அதிகரிப்பது தான். இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் 118  லட்சம் மெட்ரிக் டன்  உணவு தானியங்கள் விளைந்துள்ளன. அவற்றில் 80.25 லட்சம் டன் நெல் ஆகும். ஆனால், இதில் பாதியளவு நெல் கூட அரசால் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும். 2020-21 ஆம் ஆண்டில் 39.39 லட்சம் டன்னும், 2021-22 ஆம் ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதி வரை 29.48 லட்சம் டன்னும் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவு என்பது ஒருபுறமிருக்க கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை சேமித்து வைக்க போதுமான கிடங்கு வசதிகள் இல்லை என்பது கூடுதல் உண்மை.

இன்றைய நிலவரப்படி தமிழக அரசுக்கு சொந்தமான 260 கிடங்குகளில் 13.31 லட்சம் டன் நெல்லை மட்டும் தான் சேமித்து வைக்க முடியும். இது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் அளவில் வெறும் 18 விழுக்காடும், தமிழ்நாடு நுகர்பொருள் வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவில் மூன்றில் ஒரு பங்கும் மட்டும் தான். மீதமுள்ள நெல்லில் பெரும்பகுதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 103 திறந்தவெளி கிடங்குகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. திறந்தவெளி கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் நெல் மூட்டைகள் தான் மழைக்காலங்களில் நனைந்து, அழுகி வீணாகின்றன. அதனால் தான், நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது.

தமிழ்நாட்டின் பொது வினியோகத் திட்டத்திற்கான ஆண்டு அரிசி தேவை 38 லட்சம் டன் ஆகும். இதற்காக அரிசியாகவும், நெல்லாகவும் சுமார் 60 லட்சம் டன்களை சேமித்து வைக்க வேண்டியிருக்கும். நெல் பல்வேறு கால கட்டங்களில் கொள்முதல் செய்யப்படும்; மாதத்திற்கு 3.20 லட்சம் டன் அரிசி  வினியோகிக்கப்படும் என்பதைக் கணக்கில் கொண்டாலும் கூட, ஏதேனும் ஒரு கால கட்டத்தில் 40 லட்சம் டன் வரை நெல்லையும், அரிசியையும் இருப்பு வைக்க நேரிடும். ஆனால், அந்த அளவுக்கு  தமிழ்நாட்டில் கிடங்குகள் இல்லை. இந்த கிடங்கு பற்றாக்குறை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிய கிடங்குகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது கூட 3 லட்சம் டன் கொள்ளளவுள்ள கிடங்குகளை அமைக்க தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், இந்த கிடங்குகளை கட்டி முடிக்க குறைந்தது 4 ஆண்டுகளாகி விடும். இந்த அளவும், வேகமும் போதுமானதல்ல. அளவையும், வேகத்தையும் தமிழக அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

அதேபோல், தமிழ்நாட்டில் 2,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களுக்கு ஒவ்வொரு நாளும் 5000 மூட்டைகள் நெல் கொண்டு வரப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் நெல் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் போதிய அளவில் கிடங்குகள் இல்லாதது தான்.

தமிழ்நாட்டில் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல், மழை நீரில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காகவே 2022 - 23ஆம் ஆண்டை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக அறிவித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நடப்பாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் பா.ம.க. யோசனை தெரிவித்திருந்தது. அதன் முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு இப்போதாவது புரிந்து கொண்டு கொள்முதல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட வேண்டும்; கிடங்குகளின் எண்ணிக்கை 400 ஆகவும், கொள்ளளவு 30 லட்சம் டன்னாகவும் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5000 மூட்டைகள் சேமித்து வைப்பதற்கு வசதிகளை செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr AnbumaniRamadoss Say About Paddy issue tngovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->