அந்த கூட்டம் நடக்கவே கூடாது.. தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பது குறித்து முறையிடுவதற்காக மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான சட்டமன்றக் கட்சித் தலைவர்கள்  தில்லி சென்று சந்திக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதுமட்டுமே போதுமானதல்ல என்பதால், சட்டப்போராட்டத்தையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்து விவாதிக்கவோ, அனுமதி அளிக்கவோ காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பது அரசியலும், சட்டமும் அறிந்த அனைவரும் ஒப்புக்கொண்ட விஷயமாகும். 

ஆனால், இவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது என்ற ஒற்றை ஆயுதத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவசர, அவசரமாக ஆணையத்தைக் கூட்டி விவாதிப்பது திட்டமிட்ட நாடகமாகும். 

மேகதாது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வள அமைச்சகம் ஆகியவற்றிடம் தமிழக அரசு முறையிட்ட பிறகும், இது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதிய பிறகும் கூட, மேகதாது அணை குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதித்தே தீருவோம் என்று ஆணையத் தலைவர் ஹல்தர் தமிழகத்திற்கு வந்து கூறுகிறார் என்றால் இந்த விவகாரத்தில் கர்நாடகம், காவிரி ஆணையம், நீர்வள அமைச்சகம் ஆகியவை எவ்வளவு உறுதியாக உள்ளன என்பதை அறியலாம்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தமிழக அணைகளை பார்வையிடும் திட்டம் கடந்த 15-ஆம் தேதி வரை இல்லை. ஆனால், கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று, ஆணையக் கூட்டதை ரத்து செய்து விட்டு, பிலிகுண்டுலு, மேட்டூர் அணை, கல்லணை ஆகியவற்றை ஆணையத் தலைவர் ஹல்தர் பார்வையிட்டதற்கு பின்னணி காரணங்கள் இல்லாமல் இல்லை. 

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் போதுமான அளவுக்கு கிடைக்கிறது; மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுவதற்காகத் தான் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார் என்று எழுப்பப்படும் ஐயங்களை முற்றிலுமாக விலக்கிவிட முடியாது. இதை மேகதாது அணை சிக்கலில் தமிழகத்திற்கு எதிரான  நாடகத்தில் அடுத்தக் காட்சியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு எதிராக இந்த அளவுக்கு வலிமையாக சதி வலை பின்னப்பட்டிருக்கும் நிலையில்,  நீர்வளத்துறை அமைச்சரை தமிழக அரசியல் கட்சிகள் குழு சந்தித்து முறையிடுவதால் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழக அரசின் இந்த முயற்சி சரியானது தான். ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து சக்திகளும் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மத்திய நீர்வள அமைச்சரை சந்திப்பதால் மட்டுமே  தமிழகத்திற்கு நீதி கிடைத்து விடாது. 

உச்சநீதிமன்றத்தின் மூலமாக மட்டும் தான் தமிழகத்திற்கு நீதி  கிடைக்கும். அதுவும் காவிரி ஆணையக் கூட்டத்திற்கு தமிழகத்திற்கான நீதியை வென்றாக வேண்டும். காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டால், அதன் பின்னர்  அதை சட்டப்படியாக தடுத்து நிறுத்துவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கடந்த 7-ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அதன்பின் 10 நாட்களாகியும் இன்று வரை அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை நாளை மறுநாள் முதல் புதிய நீதிபதிகள் நடத்தவுள்ள நிலையில், வரும் 23-ஆம் தேதிக்கு முன்பாக தமிழகத்தின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. 

காவிரி சிக்கல் என்பது தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை என்பதால், அதை காரண, காரியங்களுடன் நீதிபதிகளிடம் விளக்கி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அது தான் இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு நீதியை பெற்றுத் தரும்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்கும்படி வலியுறுத்த வேண்டும். இக்கோரிக்கைக்கு கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆதரவையும் பெற வேண்டும். 

கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த காவிரி ஆணையத்தின் கூட்டம், இதற்கு சற்றும் தொடர்பில்லாத பிரதமரின் கர்நாடக சுற்றுப் பயணத்தைக் காரணம் காட்டித் தான் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக அரசின் தொடர்பில்லாத காரணத்தை ஏற்று ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்கும் போது, தமிழக அரசின் நியாயமான கோரிக்கையை ஏற்று கூட்டத்தை ஒத்திவைக்க முடியாது என்று ஆணையம் மறுக்க முடியாது.

எனவே, மத்திய அமைச்சரை தமிழக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் முழு சந்திக்கவிருப்பது ஒரு  புறம் நடைபெறும் நிலையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரணைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரளம், புதுவை அரசுடன் இணைந்து வலியுறுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say Abou Megathathu issue 18 june 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->