இந்தப் படம் உண்மையாகவே ஒரு பாடம்., பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் நெகிழ்ந்து பாராட்டிய திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகள் - ‘கஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் குறித்து மருத்துவர் இராமதாஸ் பதிவு,!

1996 முதல் 2004-ஆம் ஆண்டு வரை விமானப்படையில் பணியாற்றிய கஞ்சன் சக்சேனா என்ற வீரமகளின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட  ‘கஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 

"இந்தியாவின் மகள்!

திரைப்படங்களைத் தேடித்தேடி பார்ப்பது எனது வழக்கமில்லை என்றாலும் கூட, சில நல்ல திரைப்படங்களை, சமூகத்திற்கு செய்தி சொல்லும் படங்களை தேர்ந்தெடுத்துப் பார்ப்பது உண்டு. அவ்வாறு நேற்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அதன் பெயர்... ‘கஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’

2020-ஆம் ஆண்டில் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட திரைப்படம். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல், நெட்ஃபிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட திரைப்படம் இது. கவிஞர் ஜெயபாஸ்கரன் தான் இந்த திரைப்படத்தின் சிறப்புகளைக் கூறி பார்க்க பரிந்துரைத்தார். அவர் கூறியவாறே அது ஓர் அற்புதமான திரைப்படம் தான். பெண்களின் சிறப்பையும், துணிவையும், விடா முயற்சியையும் போற்றும் திரைப்படம்.

கதையின் நாயகியான கஞ்சன் சக்சேனா, 1984-ஆம் ஆண்டில் அவளது மாணவப் பருவத்தில் அண்ணனுடன் விமானத்தில் லக்னோவிலிருந்து பறக்கும் காட்சியுடன் திரைப்படம் தொடங்குகிறது. கஞ்சன் சக்சேனா விமானத்தின் சன்னல் வழியாக வானத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாள். ஆனால், அவளது அண்ணன் அன்ஷுமன் சக்சேனா அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும், கஞ்சனின் ஆர்வத்தைப் பார்த்த விமானப் பணிப்பெண் அவளை விமானத்தை இயக்குவதற்கான காக்பிட் அறைக்கு அழைத்துச் செல்கிறாள். காக்பிட் அறையைப் பார்த்தவுடன் கஞ்சன் சக்சேனாவுக்கு விமானியாகும் ஆசை பற்றிக் கொள்கிறது. பத்தாம் வகுப்பு படிப்பை நிறுத்தி விட்டு, விமானியாக வேண்டும் என்று கஞ்சன் சக்சேனா விரும்புகிறாள்.

கஞ்சன் சக்சேனா இராணுவக் குடும்பத்தில் பிறந்த பெண். அவளின் தந்தை அனுப் சக்சேனாவும், அண்ணன் அன்ஷுமன் சக்சேனாவும் இந்திய ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னல் நிலையில் வெவ்வேறு காலகட்டத்தில் பணியாற்றியவர்கள். ஆனால், அண்ணன் அன்ஷுமனுக்கு அவ்வளவு முற்போக்கு எண்ணம் இல்லை. 

பெண்கள் காக்பிட் சென்று விமானம் ஓட்டக்கூடாது; சமையலறைக்கு சென்று குடும்பத்தினருக்கு சமையல் செய்து போட வேண்டும் என்கிறான். அவனது நிலைக்கு அவனது தாயும் ஆதரவு. மகளுக்கு திருமணம் செய்து வைத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி விட்டாள் போதும் என்பதே அவரின் நிலை. ஆனால், தந்தை அனுப் மகளின் கனவை நனவாக்க நனவாக்க துடிக்கிறார்.

ஆனாலும் கஞ்சனின் கனவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. விமானி பயிற்சிக்கான கல்வித்தகுதி அடுத்தடுத்து உயர்த்தப்படுவதாலும், விமானி பயிற்சிக்கான கட்டணம் மிகவும் அதிகம் என்பதாலும் கஞ்சனின் கனவு நிறைவேறாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. தந்தையின் ஆதரவுடன் பட்டப் படிப்பை கஞ்சன் படித்து முடிக்கும் போது, இந்திய விமானப்படைக்கு ஆள்தேர்வுக்கான அறிவிக்கை வருகிறது. தந்தை கொடுத்த ஊக்கத்தால், விமானப்படையில் சேருவதற்கான போட்டிகளில் கஞ்சன் கலந்து கொள்கிறாள். அதை அண்ணன் தடுத்தாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயற்சிக்கிறார்.

உயரம் குறைவு, எடை அதிகம் என பல தடைகளும், குறைகளும் இருந்தாலும் அவற்றை சரி செய்து விமானப்படையில் கஞ்சன் சேர்கிறாள். அதில் தந்தைக்கு மகிழ்ச்சி. தாயும் அவரது நிலையை மாற்றிக் கொண்டு மகளை நினைத்து பெருமிதம் கொள்கிறார். ஆனால், அண்ணன் மட்டும் தொடர்ந்து எதிர்க்கிறான். அதை கண்டுகொள்ளாமல் கஞ்சன் விமானப்படை பயிற்சிக்கு செல்கிறாள். மொத்தம் 12 பேர் கொண்ட குழுவில் கஞ்சன் மட்டுமே பெண். மற்ற அனைவரும் ஆண்கள். பயிற்சியில் பல நெருக்கடிகள்... ஆண் வீரர்களின் கேலிகள்.... ஆகியவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி வீடு திரும்புகிறாள். திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் கோருகிறாள்.

ஆனால், தந்தை அனுப் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘‘காக்பிட்டில் விமானத்தை இயக்கி சாதனை படைக்க வேண்டிய நீ, காய்கறிகளை வெட்டி சமைத்துப் போட்டுக் கொண்டு கிடக்கப் போகிறாயா?’’ என்று கேட்டு மகளின் தன்னம்பிக்கையை தட்டி எழுப்புகிறார். அந்த நேரத்தில் 1999-ஆம் ஆண்டில் கார்கில் போர் வெடிக்கிறது. அதற்காக அதிக அளவில் விமானிகள் தேவைப்படுகின்றனர். அதனால் விமானப்படை பணிக்கு வரும்படி கஞ்சனுக்கு அழைப்பு வருகிறது. அப்போது கஞ்சனை சந்திக்கும் அண்ணன் அன்ஷுமன், மீண்டும் விமானப்படையில் சேர வேண்டாம் என்று வலியுறுத்துகிறார். அண்ணனின் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை உதாசீனப்படுத்தி விமானப்படை பணிக்காக கார்கில் விரைகிறாள் கஞ்சன்.

அங்கு சென்றவுடன் அவளுக்கு அளிக்கப்பட்ட முதல் பணியை நிறைவேற்றுவதற்காக ஹெலிகாப்டரில் பறக்கிறாள். ஆனால், அந்த பணி ஆபத்தானது என்று கூறி மீண்டும் முகாமுக்கு அழைக்கப்படுகிறாள். அடுத்த சிறிது நேரத்தில் போரில் ஏராளமான இந்திய வீரர்கள் காயம்பட்டு விட்டதாக செய்தி வருகிறது. அவர்களை மீட்பதற்காக கஞ்சனும், இன்னொரு ஆண் விமானியும் தனித்தனி ஹெலிகாப்டர்களில் களத்துக்கு விரைகிறார்கள். அப்போதும் கூட முகாமில் உள்ள வீரர்கள் கூட, ‘‘ ஆபத்து... நீ போகாதே. திரும்பி வா ’ என்று அழைக்கிறார்கள். 

ஆனால், கஞ்சன் அஞ்சவில்லை. அந்த நேரத்தில் பாகிஸ்தான் படைகளின் தாக்குதலில் ஆண் விமானியின் ஹெலிகாப்டர் தகர்க்கப்படுகிறது. அந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆண் விமானியையும், ஏற்கனவே காயம் பட்ட வீரர்களையும் மீட்பதற்கு கஞ்சனைத் தவிர வேறு யாரும் இல்லை. சூழலை புரிந்து கொண்ட கஞ்சன், குண்டு மழைகளுக்கு நடுவே அனைவரையும் காப்பாற்றி வெற்றிகரமாக முகாமுக்கு திரும்புகிறார். அதைப் பாராட்டி அவருக்கு 'இந்தியாவின் மகள்' என்ற பட்டம் வழங்கப்படுகிறது. அத்துடன் கஞ்சன் சக்சேனா படம் நிறைகிறது.

1996 முதல் 2004-ஆம் ஆண்டு வரை விமானப்படையில் பணியாற்றிய கஞ்சன் சக்சேனா என்ற வீரமகளின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கஞ்சன் சக்சேனாவாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். படம் சிறிதும் விரசம் இல்லாமல் தேசபக்தியையும் வீரத்தையும் ஊட்டுவதாக உள்ளது. இந்தியப் போர்ப்படையில் முன்கள வீரர்களாக பெண்கள் இப்போது தான் படிப்படியாக அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், 22 ஆண்டுகளுக்கு முன்பே கார்கில் போரில் சாதித்த வீரப்பெண்மணியின் உண்மை வரலாறு இந்த படம். உண்மையாகவே மெய்சிலிர்க்கவைத்தது.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கேட்ட சமுதாயத்திற்கு பதில் கூறும் வகையில்,

‘‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.’’ என்று பாடி பெண்களை ஊக்குவித்தவர் பாரதியார். பாரதியாரின் கனவுகளை ஒரு வீரமகள் நனவாக்கியிருக்கிறாள் என்பதை விளக்கும் இந்தப் படம் உண்மையாகவே ஒரு பாடம்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss say about Gunjan Saxena The Kargil Girl movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->