தமிழக அரசு துறையில் தனியார் மயம் - முதல்வர் ஸ்டாலின்.! பறிபோகும் அரசுப்பணி., வெளியான அதிர்ச்சி அறிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணியிடங்களைக் குறைத்து, தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக வெளியாகி வரும் நம்பத்தகுந்த செய்திகள் பெரும் கவலையும், மிகுந்த ஏமாற்றமும் அளிக்கின்றன. நில அளவை பணியாளர்களின் நலன்கள் எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்ய நில நிர்வாக ஆணையர் முடிவு செய்திருப்பதாகவும்,  அதற்காக புதிய அரசாணை வெளியிடுவதற்கான கோப்பு வருவாய்த்துறை அமைச்சருக்கு அனுப்பப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

நில அளவைத்துறையைப் பொறுத்தவரை டிராப்ட்ஸ் மேன், நில அளவையர் தொடங்கி கூடுதல் இயக்குனர் வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி தான் அடிப்படைக் கல்வித் தகுதி ஆகும். தொடக்க நிலையில்  டிராப்ட்ஸ் மேன், நில அளவையர் உள்ளிட்ட பணிகளில் சேரும் பணியாளர்கள், அதன்பின் அனுபவம், செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் இயக்குனர் வரை பதவி உயர்வு பெறுவது தான் வழக்கமாகும்.

ஆனால், இப்போது டிராப்ட்ஸ் மேன், நில அளவையர் ஆகிய பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படைக் கல்வித் தகுதியாக இருக்கும்; அத்துடன் பொறியியலில் பட்டயப்படிப்பு படித்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும் என்று உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. 

நில அளவை துணை ஆய்வாளர் பணியிடங்கள் இதுவரை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், இளநிலை பொறியியல்  பட்டம்/ முதுநிலை அறிவியல் பட்டம் கூடுதல் தகுதியாக இருக்கும் என்றும், இப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்றும் கருத்துரு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பத்தாம் வகுப்பு பயின்று அரசு பணிக்கு சென்று விடலாம்; திறமையின் அடிப்படையில் கூடுதல் இயக்குனர் நிலை வரை உயரலாம் என்ற ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளின் கனவு சிதைந்து விடும். அதுமட்டுமின்றி, கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வாங்க முடியாது; துணை ஆய்வாளர், ஆய்வாளர் நிலையில் ஊதிய முரண்பாடுகள் ஏற்படும். 

இவை அனைத்தையும் கடந்து, நில அளவை குறித்த பணிகள் அனுபவத்தின் அடிப்படையில் செய்யப் படுபவை. ஒருவர் பொறியியல் பட்டம் படித்து விட்டதால் மட்டுமே நேரடியாக துணை ஆய்வாளர், ஆய்வாளர் பணிக்கு  வந்து அதன் கடமைகளை நிறைவேற்ற முடியாது. இது நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் பணிகளையும், செயல்பாடுகளையும் பாதித்து, நிலைகுலையச் செய்து விடும்.

இத்தகைய பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, அதை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம்... நில அளவைப் பணிகள் படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டு வருவது தான். நில அளவையர் மற்றும் அது சார்ந்த பணியிடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் அப்பணிகளை தனியார் மேற்கொள்வதற்காக நில அளவையர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த உரிமம் பெற்றவர்கள் தனிப்பட்ட முறையில் நில அளவை செய்ய முடியும். ஆனால், அவர்கள் நில அளவை மேற்கொண்டு வழங்கும் சான்றிதழ்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால், தேவையற்ற  குழப்பங்கள் ஏற்படுகின்றன; அதுமட்டுமின்றி அரசு நில அளவையர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது.

தமிழக அரசின் நில நிர்வாக ஆணையரும், இயக்குனரும் பரிந்துரைத்துள்ள மாற்றங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், நில அளவை மற்றும் அது சார்ந்த பணிகளில் உள்ள 7000 பணியிடங்கள்  ஒழிக்கப்படும்; 7000 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும். அத்தகைய பாதிப்பை அரசு அனுமதிக்கக்கூடாது.

அரசு ஊழியர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பல்வேறு தருணங்களில் வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழக அரசில் புதிதாக 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு நேர்மாறாக ஏற்கனவே உள்ள அரசு பணியிடங்களை ஒழிக்கவும், வேலைவாய்ப்புக்கான நடைமுறைகளை  மாற்றுவதற்கும் அதிகாரிகள் முயலக்கூடாது. 

இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரனும் தலையிட்டு, நில அளவை பணியாளர் நலனுக்கு எதிரான மாற்றங்களை தடுக்க வேண்டும்; இப்போதுள்ள நிலையே  தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About TNGovt Job In Private


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->