தமிழகத்தில் "லுலு" நிறுவனம் வணிகவளாகம்., பாஜக தரப்பில் எதிர்ப்பு.!
g k nagaraj say about lu lu Shopping mall
அபுதாபி ஷேக்குகளின் லுலு வணிக வளாகம் தமிழககத்தில் சிறு,குறு தொழில்களுக்கும்,வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "வடஇந்தியரையே தமிழகத்தில் தொழில் துவங்க, பணிபுரிய ஆட்சேபனையம் தெரிவிப்பவர்கள், அபுதாபி ஷேக்குகளின் லுலு நிறுவனத்தின் வணிகவளாகத்தை தமிழகத்தில் அனுமதித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த ஒப்பந்தத்தால் தமிழகத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகளும், சிறு, குறு வியாபாரிகளும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.
ஏற்கனவே, தமிழகத்தில் பல வணிகவளாகங்கள் கொரோனாவால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்திருக்கும் நிலையில், லுலு போன்ற நிறுவனங்களின் சர்வதேச பொருட்கள் விற்பனையாலும், வியாபார தந்திரத்தாலும் தமிழக வணிகவளாகங்கள் இழுத்துமூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
சர்வதேச தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவுவது ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும். சிறு,குறு தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் வாய்ப்பையும் கொடுக்கும். ஆனால் லுலு போன்ற வணிகவளாகங்கள் சர்வதேசப் பொருட்களின் விற்பனையையும், அவர்களின் வருமானத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.
பாரதப்பிரதமரின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலமாக உள்ளூர் தயாரிப்புகளை உலகத்தரத்திற்கு உயர்த்த, தொழில்நிறுவனங்களை ஊக்குவிக்கின்ற இவ்வேளையில், இதுபோன்ற வணிகவளாகங்களின் வியாபார யுக்திகள் தமிழக தொழில்முனைவோருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
எனவே, தமிழக முதல்வர் தமிழர்களின் நலன் கருதி லுலு நிறுவனம் வணிகவளாகம் அமைப்பதற்கான செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று ஜி கே நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
g k nagaraj say about lu lu Shopping mall