பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரையில் தமிழக மீனவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை; சீமான் பேச்சு..!
No attack was carried out on Tamil Nadu fishermen as long as Prabhakaran was alive Seaman speech
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கிண்டியில் கூட்டு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். குறித்த கூட்டம், 'அர்த்தம் இல்லாதது' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்
.இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது; ''010-ஆம் ஆண்டில் இருந்தே மீனவர்களின் பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம்.
இது தொடர் கதையாக இருக்கிறது. மீனவர் வாழ்க்கையின் மீது துளியும் மதிப்பளிக்காத அரசுகள் தான் இங்க தொடர்ந்து வருகிறது. ஓட்டுக்காக மட்டுமே கவலைப்படும் இந்த ஆட்சியாளர்கள், மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை.'' என்று பேசியுள்ளார்.

அத்துடன், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் இந்த அரசு, ஒரு மீனவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு என்ன கொடுக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், படகை பறித்துக் கொண்டால் மீனவரின் வாழ்வாதாரம் பறிபோய்விடும்.
இந்தியாவின் ஒரு மாநில அளவு கூட இல்லாத ஒரு சின்ன நாடு, இவ்வளவு பெரிய துணைக் கண்டத்தின் குடிமக்களின் படகை பறித்து, அரசுடையாக்கி ஏலம் விடுவதை வேடிக்கை பார்க்கும் அதிகாரத்தை எப்படி பார்ப்பது..? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இந்த நாடும், ராணுவமும் எங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை என் இன மக்களுக்கு எப்படி வரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு சின்ன நாடு இலங்கை கடற்படையினரிடம் இருந்து, தன் சொந்த நாட்டு மக்களையே பாதுகாக்காத கடற்படை, என்ன பாதுகாப்பு பணியை செய்கிறது. இந்த கேள்வி எழுமா? எழாதா? எங்களின் ஓட்டு இனிக்குது? வாழ்க்கை மட்டும் கசக்குதா? என சீமான் விமர்சித்துள்ளார்.

அத்துடன், எங்க வரியை வாரி சுருட்டி செல்லும் நீங்கள், எங்களின் உரிமை மற்றும் உயிரைப் பற்றி சிந்திப்பதே கிடையாது எனவும், குஜராத் மீனவன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்படும் போது, விரட்டிச் சென்று மீனவனை மீட்டு வந்தது. அதுபோல, எங்கள் மீனவனை தடுக்காதது ஏன்? என கேட்டுள்ளார்.
மேலும், எங்களை இந்த நாட்டு குடிமகனாக இந்த நாடு ஏற்கிறதா? இல்லையா? கச்சத்தீவை கொடுக்கும் போது வேடிக்கை பார்த்தது போல, எங்களின் உயிர் போவதையும் வேடிக்கை பார்க்கிறார். என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கல்வி மாநில உரிமை எப்படி பொதுப்பட்டியலுக்கு போச்சு. உங்கள் ஆட்சியில் தான் எடுத்துட்டு போனாங்க. அப்போ விட்டுட்டீங்க. டிரம்ப்பே இப்போ கல்வியை மாநில உரிமைகளுக்கு விட்டுட்டாரு. அதை கேட்டு பெற்றிருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் செயல்படுத்தி விட்டு, தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறீங்க. கச்சத்தீவை திருப்பி எடுத்தால் மட்டுமே தீர்வு. தேர்தலின் போது, கச்சத்தீவை திருப்பி எடுக்க வேண்டும் என்று ஒரு மாதம் பேசிட்டு அப்படியே விட்டு விட்டார் என்றும், கச்சத்தீவு என்னுடைய உடமை. எல்லைத் தாண்டி வரும் கேரள மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதில்லை, துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை. ஏனென்றால், அந்த மாநிலம் அப்படியொரு பாதுகாப்பை கொடுக்கிறாங்க என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இங்கு அப்படியில்லை. குரலற்ற, அதிகாரமற்ற மீனவர்கள் வாழும் பகுதிகளில் தான் நச்சு ஆலைகளை நிறுவுகின்றனர். எண்ணூர் எல்லாம் குப்பை கூடாரம் ஆகிவிட்டது. தமிழகத்தின் நச்சு ஆலைகளின் கூடாரம் கடலூர். இந்தியாவின் நச்சு ஆலைகளின் கூடாரம் தமிழகம். இதேபோன்று, பிற மாநிலங்களில் நச்சு ஆலைகளில் நிறுவ முடியுமா? என பேசியுள்ளார்.
மேலும், கேரளாவில் தான் முதன் முதலாக அணுஉலை வந்தது. ஆனால், அங்கு ஏன் நிறுவவில்லை. தூத்துக்குடியில் மட்டும் தான் கடற்கரை இருக்கிறதா? பிற மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஏன் நிறுவப்படவில்லை. எனக்கு பெத்தவன் அப்பனா இல்ல? மத்தவன் தான் இருக்கிறான். அதான் இப்படி என காட்டமாக கூறியுள்ளார்.
அத்துடன், ஹைட்ரோ கார்பன் எடுக்க திராவிட அரசுகள் கையெழுத்திடும். ஆனால், இந்த மண்ணின் மைந்தர்களாகி நாங்கள் விடமாட்டோம். எனக்கு ஒரு முறை அதிகாரம் கொடுத்து பாருங்கள். நான் பதவியில் இருக்கும் போது என் மீனவனை தொட்டு விட்டால், நான் பதவியை விட்டு விலகிடுறேன். பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரையில் தமிழக மீனவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டில்லியில் ரூ.150 கோடி ஊழல் நடந்ததாக கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்தீங்க? இங்க ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்றீங்க? அப்புறம் ஏன் நடவடிக்கை எடுக்கல? டாஸ்மாக் ஊழல் என்று நடவடிக்கை எடுங்க என்று அண்ணாமலை போராடினார். யாரை எதிர்த்து போராடுனீங்க? யாருக்கு கோரிக்கை வைத்து போராடுனீங்க? நாடக ஆசிரியர் முதல்வர் ஆனார். தற்போது அவரது மகன் முதல்வராக இருக்கிறார். தற்போது அதே நாடகம் தொடர்கிறது, சகித்துக் கொள்ள வேண்டியது தான்என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னையில் முதல்வர் நடத்திய குழு கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர், 'ஒரு அர்த்தமில்லாதது,' என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
No attack was carried out on Tamil Nadu fishermen as long as Prabhakaran was alive Seaman speech