வாஜ்பாய் எப்போது மதச்சார்பின்மையைக் காத்தார் முதல்வரே? - இடும்பாவனம் கார்த்தி கேள்வி!
NTK Idumbavanam karthi DMK MK Stalin
இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின்100-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்த செய்திக்குறிப்பில், "முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.
வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை பேணிக் காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!" என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வாஜ்பாய் எப்போது மதச்சார்பின்மையைக் காத்தார் முதல்வரே? என்று, நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "வாஜ்பாய் பாஜகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போதுதான் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போதுதான் குஜராத்தில் 3, 000க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் துள்ளத் துடிக்க படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதுவெல்லாம் மதச்சார்பின்மையில்தான் வருகிறதா முதல்வரே? மதச்சார்பின்மையைக் காத்ததாக முதல்வர் ஸ்டாலினால் புகழப்பட்ட வாஜ்பாயோடு ஜெயலலிதா கூட்டணி வைத்தபோது கருணாநிதி எதற்கு விமர்சித்தார்?
மதச்சார்பின்மையைக் காத்த வாஜ்பாய் தலைமையிலான பாஜகவை, 'பரதேசிகள்', 'பண்டாரங்கள்' என கருணாநிதி ஏன் சாடினார்?" என்றும் இடும்பாவனம் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
NTK Idumbavanam karthi DMK MK Stalin