தக்காளியை ஓரங்கட்டிய கத்திரி., முதல்வருக்கு ஓபிஎஸ் அவசர கோரிக்கை.!
ops say about Vegetable price Hike
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 24-ந்தேதி அன்று காய்கறிகளின் வெளிச்சந்தை விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனால் செய்தி குறிப்பிலோ அரசின் நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 24-ந்தேதி அன்று வெளிச்சந்தையில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருக்கும் ஒரு கிலோ தக்காளி தற்போது வெளிச்சந்தையில் ரூ.125-க்கும், ரூ.80-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.150-க்கும், ரூ.71-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.170-க்கும், ரூ.30-க்கு விற்ற சவ்சவ் ரூ.75-க்கும், ரூ.121-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.260-க்கும், ரூ.40-க்கு விற்ற கோஸ் ரூ.80-க்கும், ரூ.45-க்கு விற்ற சுரைக்காய் ரூ.105-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர அவரைக்காய் ஒரு கிலோ ரூ.160-க்கும், கோவைக்காய் ஒரு கிலோ ரு.100-க்கும், புடலங்காய் ரூ.120-க்கும், காலிபிளவர் ரூ.150-க்கும், பாகற்காய் ரூ.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில காய்கறிகளைத் தவிர அனைத்துக் காய்கறிகளின் விலையும் ரூ.100-க்கும் மேல் வெளிச்சந்தையில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகிறது.
நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் அரசுக்கு விளம்பரம் கிடைத்ததே தவிர மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. மக்கள் கண்ணீர் விடும் அளவுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலைகள் ஏறிக் கொண்டே செல்கின்றன. மளிகைப் பொருட்களை விட காய்கறிகளுக்கு மக்கள் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனா உச்சத்தில் இருக்கும்போது கூட இந்த அளவுக்கு காய்கறிகளின் விலை உயரவில்லை. அப்போது எல்லாம் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர், முதல்-அமைச்சராக வந்த பிறகு அதைவிட பன்மடங்கு காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருவதைப் பற்றி பேசாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு அனைத்து காய்கறிகளின் விலையையும் குறைந்தபட்சம் பாதியாவது குறைக்கும் அளவுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
ops say about Vegetable price Hike