பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை (2025-26) அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
இந்த வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
1. 2025&26ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.65,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
2. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
3. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி செலவிடப்படும்.
4-. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.
நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25% வேளாண்துறைக்கு
5-. தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25% வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. அதன்படி, பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என்றால், அதில் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக ரூ.85,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
7. பயிர்க் கடன்சுமை, கொள்முதல் விலை உள்ளிட்ட உழவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.
அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க சட்டம்
8. தமிழ்நாட்டில் 2025&26ஆம் ஆண்டு உழவர்களின் இலாபத்தையும் வாழ்வாதாரத்தையும் பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
9. அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும்.
10. அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, வேளாண் வணிகம் & சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.
11. வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும். உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும்.
12. காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயிக்கப்படும்.
நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.5,000
13. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.
14. வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.
15. நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.
16. கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள். 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.
கொள்முதல் வாரியத்திற்கு ரூ.6,000 கோடி மானியம்!
17. தமிழக அரசே நெல்லை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவதால் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி மத்திய அரசிடம் இருந்து நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கத் தேவையில்லை. அதனால், அதற்கான மானியத்தை மத்திய அரசிடமிருந்து நேரடியாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
18. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் நேரடி மானியம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் உணவு மானியம் ஆகியவற்றைக் கடந்தும் கொள்முதல் வாரியத்திற்கு பெரும் செலவு ஏற்படும். அதை சமாளிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் கொள்முதல் மானியமாக ரூ.6,000 கோடி வழங்கப்படும்.
காவிரி பல்பொருள் அங்காடிகள் & ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
19. வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுவதுபோக மீதமுள்ளவற்றை மக்களுக்கு நியாயவிலையில் விற்பனை செய்ய காவிரி பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்படும்.
20. 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
21. வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்ய தனியாரும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கொள்முதல் விலை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தான் அவர்கள் வாங்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, சமையல் எண்ணெய்
22. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உழவர்களிடம் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
23. நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.
பருப்பு, எண்ணெய்வித்து உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டம்
24. தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு இப்போதுள்ள 1.25 இலட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
25. துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
26. எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும்.
27. நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
28. எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை.
வேளாண் திட்ட ஆணையம்
29. தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கித் தருவதற்காக தமிழ்நாடு வேளாண் திட்ட ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
30. வேளாண் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மாநில வேளாண் கொள்கை உருவாக்கப்படும்.
31. நீர்ப்பாசனத் திட்டங்களை புத்தெழுச்சியுடன் செயல்படுத்த தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
32. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.
33. தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் 15,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்துவிட்டது. காணாமல்போன ஏரிகளில் சாத்தியமானவற்றை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
34. வனவிலங்குகளால் தாக்கப்படும் மனிதர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.
35. விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம், முடங்கும் அளவுக்கு காயமடைவோருக்கு ரூ.15 லட்சம், லேசான காயமடைவோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
36. வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முதலீடு திரட்டுவதற்காக வேளாண்துறை முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்.
37. 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும். அரசின் சார்பில் ரூ.1 கோடி வரை முதலீடு, ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்
.
பயிர்க்காப்பீடு & புதிய நிறுவனத்தை அரசே தொடங்கும்
38. தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கும்.
39. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்க நிலையான நிவாரணத் திட்டம் வகுக்கப்படும்.
40. இந்தத் திட்டத்தின்படி, வறட்சியால் முழுமையாக பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000, ஓரளவு பாதிக்கப்படும் பயிர்களுக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
41. கரும்புக்கு ரூ.1.2 லட்சம், நிலக்கடலைக்கு ரூ.33,000, பிற பணப் பயிர்களுக்கு ரூ.1.25 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
நெல் உற்பத்தித் திறன் & ஹெக்டேருக்கு 6 டன்னாக உயர்த்த சிறப்புத் திட்டம்
42. பஞ்சாப், அரியானா மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் நெல் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து, உற்பத்தித் திறனை ஹெக்டேருக்கு 6 டன்னாக உயர்த்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
43. காவிரி டெல்டா மாவட்டங்களில் சராசரி உற்பத்தித் திறன் 5 டன்னாகவும், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 7 டன்னாகவும் உயர்த்தப்படும்.
44. வேளாண்துறையில் ஆண்டுக்கு 6% வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான உத்திகள் வகுத்து வழங்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
45. வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சந்தை வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்களுக்கு விளக்கும் வகையில், ஆண்டுதோறும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சிகள் 3 நாட்களுக்கு நடத்தப்படும்.
வேளாண்துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
46. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
47. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
48. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
49. கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
50. தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்படவிருக்கும் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் வாரியத்திற்கு 50,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.
51. தமிழ்நாடு முழுவதும் புதிதாக திறக்கப்படவுள்ள 30 ஆயிரம் காவிரி பல்பொருள் அங்காடிகளில் பணியாற்ற ஒரு லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
உழவர் மூலதன மானியம்: பயனாளிகள் எண்ணிக்கை 60 லட்சமாக்கப்படும்
52. மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 37.81 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
53. தமிழ்நாட்டில் சிறு&குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.
54. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
55. அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
56. கொள்முதல் வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க 600 புதிய கிடங்குகள் அமைக்கப்படும்.
உழவு, நடவு, அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் மானியம்
57. உழவு, நடவு, அறுவடை எந்திரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
58. வேளாண் எந்திரங்களை வாங்குவதற்கான மானியம் பட்டியலினத்தவருக்கு 60% ஆகவும், பிற சமுதாயத்தினருக்கு 50%ஆகவும் உயர்த்தப்படும்.
59. வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை வாயிலாக வழங்கப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 முதல் ரூ.950ஆக குறைக்கப்படும்.
60. உழவு எந்திரங்கள் மற்றும் பிற எந்திரங்களுக்கான வாடகை மணிக்கு ரூ.300ஆக குறைப்பு.
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் 9 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
61. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.
62. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மை தவிர்த்த பிற தொழில் திட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.
63. என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது.
64. 66,000 ஏக்கர் பரப்பளவில் வீராணம் & பாளையங்கோட்டை சுரங்கத் திட்டம், சேத்தியாத்தோப்பு சுரங்கத் திட்டம் ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்.
65. அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் ஆலைகள் அமைக்க தடை விதிக்கப்படும்.
66. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அனைத்து வகை தொழில் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும்.
67. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதன் மூலம் தமிழ்நாடு ஹைட்ரோ கார்பன் திட்டம் இல்லாத மாநிலமாக திகழும்.
சிப்காட் தொழில்பேட்டைகளுக்கு நிலங்களை கையகப்படுத்த தடை
68. செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.
69. சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்திற்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது.
70. சென்னை அருகே அறிவு நகரம் அமைக்க 870 ஏக்கர் நிலம் எடுக்கும் திட்டம் கைவிடப்படும்.
71. கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கப்படும்.
தோட்டக்கலை பரப்பை அதிகரிக்க சிறப்புத் திட்டம்
72. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும்.
73. ஒரே நிலத்தில் பலவகைப் பயிர்களைப் பயிரிட்டு உழவர்கள் அதிக இலாபம் பெறும் தொழில்நுட்பம் வழங்கப்படும்.
74. மலர் சாகுபடியை திறந்த வெளியிலும், நெகிழிக் கூடாரங்களிலும் பயிரிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.
75. தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் மலர் பயிர்கள் தரம் பிரிக்கப்பட்டு மதுரை, கோவை, திருச்சி, சென்னை விமான நிலையங்கள் மூலம் உடனடியாக துபாய், லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அடுத்த நாளே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி & தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்துக்கு அடிக்கல்
76. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குமார மங்கலம் & ஆதனூர் இடையே கட்டுப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஜூலை மாதம் திறப்புவிழா நடத்தப்படும்.
77. காவிரி & தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.
78. மதுராந்தகம் ஏரியை ரூ.120 கோடியில் தூர்வாரி சீரமைக்கும் திட்டம் ஜூலையில் நிறைவடையும்.
வேளாண் திட்டங்களுக்கு நிதித் திரட்ட சிறப்பு வரி
79. வேளாண் பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புக் கூட்டுவரி மீது 10%, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீது 20%, மோட்டார் வாகன வரிகள் மீது 30% சிறப்புத் தீர்வை வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி திரட்டப்படும்.
80. தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,600இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.
81. ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்.
ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம்
82. கொங்கு மண்டலத்தை வளம் கொழிக்கச் செய்த நொய்யல் ஆற்றை மாசு மற்றும் கழிவுகள் கலப்பதில் இருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
83. நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் மொத்தம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும். 2025&26ல் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம்
84. கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்றாலும் கூட, அத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இத்திட்டம் குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த 4 முறை நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் வெற்றிபெறவில்லை.
85. கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும்படி மத்திய அரசை
தமிழக அரசு வலியுறுத்தும். இதற்காக தமிழக அமைச்சர்கள் குழு தில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும்.
காவிரி & குண்டாறு இணைப்பு: வழக்கை மீறி பணிகள் தொடரும்
86. கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியைப் போக்குவதற்கான காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
87. இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் காவிரி & குண்டாறு இணைப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்
88. தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 கோடி மதிப்பில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாசனப் பரப்பை 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் நோக்குடன் கீழ்க்கண்ட பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
89. பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
90. தாமிரபரணி & நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
91. தென்பெண்ணை & துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மணல் குவாரிகள் மூடப்படும்
92. தமிழ்நாட்டில் 25 இடங்களில் மணல் குவாரிகளும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. உழவுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.
93. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் எம்&சாண்ட் ஆலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் தமிழ்நாட்டில் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
தோட்டக்கலை பல்கலைக் கழகம்
94. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.
95. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
96. தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
வேளாண் கல்வி & 3 புதிய பல்கலைக் கழகங்கள்
97. தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.
திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி
98. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.
99. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கும்.
100. தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.
பனை மரங்கள் மூலம் ஏக்கருக்கு ரூ.16 இலட்சம் வருவாய் & சிறப்புத் திட்டம்
101. தமிழ்நாட்டில் தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை தமிழக அரசே அதன் சொந்த செலவில் அகற்றித்தரும். காலி நிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
102. ஒரு ஏக்கர் நிலத்தில் 400 பனை மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்த பின் ஒரு மரத்திற்கு ரூ.4,000 வீதம் ஒரு ஏக்கருக்கு இன்றைய மதிப்பில் ரூ.16 இலட்சம் வரை வருவாய் ஈட்டமுடியும்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.20,000 கோடி மானியக் கடன்
103. வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.
104. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது. மாறாக, 10% மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் பெறும் விவசாயி, ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.
105. 2025&26ஆம் ஆண்டில் ரூ.20,000 கோடி அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கும்.
பால் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும்
106. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய மாடு வகைகளான காங்கேயம், உம்பலாச்சாரி போன்ற இனங்கள் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டு பராமரிக்கப்படும்.
107. எருமை வகைகளில் அதிகப்படியாக பால் கொடுக்கும் முர்ரா வகை இனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் பால் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக்கப்படும்.
108. காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
109. இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு குழுவில் 1000 உழவர் & மீனவர் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
110. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் நீர் இருப்புக்கு ஏற்றவாறு புதிய மீன் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் & 150 நாட்கள் வேலை
111. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.
112. வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.
113. வேளாண் துறை 3ஆகப் பிரிக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் & சந்தைப்படுத்துதல் ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
114. தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
115. வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 240 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.