சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் - கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to Sri Lankan Govt Tamil Fisherman
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்காக மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நாளை மறுநாள் 29-ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது எத்தகைய அணுகுமுறை? என்பது தெரியவில்லை. மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு கண்டுவிடக்கூடாது என இலங்கை நினைக்கிறதோ? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது.
இன்றைய சூழலில் மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் தலையாயத் தேவை ஆகும்.
இதை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களை, அவர்களின் படகுடன் உடனடியாக விடுதலை செய்வதற்கும், நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to Sri Lankan Govt Tamil Fisherman