வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு நிவாரணம்!....மத்திய அரசு ரூ.5,858.60 கோடி விடுவிப்பு!
Relief for 14 flood affected states central government released 5.8 crore
பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கனமழை பெய்தது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய பங்காகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முன்பணமாகவும் ரூ.5,858.60 கோடியை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்விவகார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழையின் போது மிக அதிக மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு ரூ.1,492 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.1,036 கோடியும், அஸ்ஸாமுக்கு ரூ.716 கோடியும், பீகாருக்கு ரூ.655.60 கோடியும், குஜராத்திற்கு ரூ.600 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.416.80 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.189.20 கோடியும், கேரளாவுக்கு ரூ.145.60 கோடியும், மணிப்பூருக்கு ரூ.50 கோடியும், திரிபுராவுக்கு ரூ.25 கோடியும், சிக்கிமுக்கு ரூ.23.60 கோடியும், மிசோராமுக்கு ரூ.21.60 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.19.20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதலின்படி, 21 மாநிலங்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், நிதியுதவி தவிர, வெள்ளம் பாதித்த அனைத்து மாநிலங்களுக்கும் என்.டி.ஆர்.எப். குழுக்கள், ராணுவ பிரிவுகள் மற்றும் விமான படை ஆகியவற்றை அனுப்பி மத்திய அரசு உதவி செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Relief for 14 flood affected states central government released 5.8 crore