மும்மொழி கொள்கையை தடுப்பது சமூக அநீதி; மொழியை வைத்து முதலமைச்சர் அரசியல் செய்கிறார்; வானதி ஸ்ரீநிவாசன் அதிருப்தி..!
The Chief Minister is playing politics based on language says Vanathi Srinivasan
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 'அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அந்த அறிக்கையில், "தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மும்மொழி கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்பது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மக்களுக்காக திட்டங்களை வகுக்கவும், கொள்கைகளை உருவாக்கவும் மோடி அரசுக்கு மக்கள் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள்.
அதன்படியே மோடி அரசு பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்து வருகிறது.அதில் ஒன்றுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ) மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்திற்கான நிதி மட்டும் என்று திமுக அரசு கேட்கிறது. திட்டத்தை செயல்படுத்தினால் தான் சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறி இருக்கிறார். இதை வழக்கம்போல திரித்து, மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் செய்து வருகின்றனர்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்வது, இந்தி திணிப்பு. என்றும் மும்மொழி கொள்கை திணிப்பு என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான பொய். புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. தாய்மொழி, ஆங்கிலம், அதற்கு அடுத்து மாணவர்கள் விரும்பும் மொழி என்றுதான் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் கோடிக்கணக்கில் வசிக்கிறார்கள். இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்கள் தாய்மொழியை கற்க முடியும். அந்த வாய்ப்பை திமுக அரசு ஏன் மறுக்கிறது? அப்படி மறுப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்லவா?
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திரும்பத் திரும்ப திமுக அரசு கூறுகிறது. அதன் மூலம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை இல்லாமல் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் பல பத்தாண்டுகளாகவே மும்மொழி கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள் தான். முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தான்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்கிறது. சில பள்ளிகளில் நான்காவது மொழியாக சமஸ்கிருதம், பிரெஞ்சு ஜெர்மன் போன்ற மொழிகளையும் வைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பட்டியலின் பழங்குடியின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழிகொள்கை கூடாது என்கிறது திமுக அரசு. இது. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் அல்லவா!
அரசு ஒரு கொள்கையை உருவாக்கினால், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு கொள்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கொள்கை என இருந்தால் எப்படி சமத்துவம் உருவாகும்! சமூக நீதி கிடைக்கும்?
குறைந்தபட்சம் திமுகவினர். தங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலாவது இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்க வசதிகளை ஏற்படுத்தி விட்டு ஏழ மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை, மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்தாலும், அதை தடுப்பது சமுக அநீதி இதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழி போட்டு மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்க நினைத்தால். அது இனி வெற்றி பெறாது.
இதனை உணர்ந்து தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
The Chief Minister is playing politics based on language says Vanathi Srinivasan