1001வது நாள் போராட்டம்: பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே - விஜய் போட்ட டிவிட்!
TVK Vijay Parandur protest
சென்னை மண்டலத்தின் 2-வது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் இந்த விமான நிலையம் உருவாக்கப்படவிருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இத்திட்டத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டு, நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.
இத்திட்டம், பெரும்பாலான விவசாய நிலங்களைக் கைப்பற்றுவதால், ஏராளமான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் எனக் கூறி, ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏகனாபுரம் மையமாக, இவர்கள் மேற்கொண்டிருக்கும் எதிர்ப்புப் போராட்டம் இன்று 1,000-வது நாளைக் கடந்து உள்ள நிலையில், அவர்கள் உறுதியோடு தங்களுடைய நிலங்களையும் உரிமையையும் காப்பதற்காக போராடி வருகின்றனர்.
இந்த நீண்டகாலப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள போதும், அரசு தனது திட்டத்தில் மாற்றமின்றி நிலைத்து நிற்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலையம் பணிகளை விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளது.
நேற்று 1,000-வது நாளையொட்டி ஏகனாபுரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் கூட்டத்தில், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Vijay Parandur protest