ஜாதி பிரச்சினை தொடர்பில் சபாநாயகரின் கருத்து உண்மைக்கு புறம்பானது: மார்க்சிஸ்ட் சண்முகம் பேட்டி..!
The Speaker statement on the caste issue is untrue Marxist Shanmugam interview
'திருநெல்வேலியில் ஜாதி பிரச்னை இல்லவே இல்லை. சிறுவர்கள் இடையிலான பிரச்னையை ஜாதி பிரச்னையாக உருவகப்படுத்த வேண்டாம்' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். சபாநாயகரின் இந்த கருத்து உண்மைக்கு புறம்பானது என மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
“சிறார்களுக்கு பணத்தை கொடுத்து மூளை சலவை செய்து தவறாக வழிநடத்துபவர்களை அடையாளம் கண்டு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் எனவும், தமிழகம் முழுவதும் எந்தப் பகுதியிலும் ஜாதி பிரச்னை இல்லை எனவும் அப்பாவு கூறியிருந்தார்.

இது குறித்து மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது; திருநெல்வேலியில் முற்றிலுமாக ஜாதி பிரச்னை இல்லை என அப்பாவு கூறிய கருத்து ஏற்புடையது அல்ல. நான்கு, ஐந்து ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட ஜாதிய வன்கொடுமைகள் நடைபெற்ற மாவட்டமாக திருநெல்வேலி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜாதி ரீதியாக பாகுபாடும், ஜாதி ரீதியாக வன்கொடுமையும் அதிகமாக நடக்கக்கூடிய மாவட்டங்களில் ஒன்றாக திருநெல்வேலி இருக்கிறது என்பதற்கு போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கையே சாட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆக, சபாநாயகர் சொல்லக்கூடிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க., கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால், இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சொல்லாத பலவற்றையும் அவர்கள் செய்து இருக்கிறார்கள். சொன்னதை செய்யாமல் இருக்கும் மிச்ச வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே தி.மு.க., மீதான விமர்சனங்களை சண்முகம் தொடர்ந்து வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The Speaker statement on the caste issue is untrue Marxist Shanmugam interview