#தமிழகம் || பாதயாத்திரைக்கு தயாராகும் காங்கிரஸ் கட்சியினர்.!
tn congress pathayatri
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக நாள்தோறும் மத்திய பா.ஜ.க. அரசு கடுமையாக உயர்த்தி வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரி கூடுதலாக லிட்டருக்கு ரூபாய் 18.70, டீசலுக்கு ரூபாய் 18.34 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இந்த கலால் வரி உயர்வு பெட்ரோலில் 203 சதவிகிதமாகவும், டீசலில் 531 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் விலை ரூபாய் 29.02 ஆகவும், டீசல் விலை ரூபாய் 27.58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்போடு செஸ் வரியையும் ஒன்றிய அரசு விதித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கோவை ரெட்கிராஸ் மாளிகை அருகில் இருந்து சென்னை நோக்கி பாத யாத்திரை நடைபெறுகிறது.
550 கி.மீ. தூரமுள்ள பாதயாத்திரை 56 தொண்டர்களுடன் 18 நாட்கள் நடைபெற உள்ளது. மக்களின் ஆதரவைத் திரட்டுகிற வகையில் நடைபெறவுள்ள இந்த பாதயாத்திரையை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் பாதயாத்திரை செல்லும் பகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பேராதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்"
இவ்வாறு அந்த அறிக்கையில் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.