பின்வாங்கப்போவதில்லை., அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.!
TN MINISTER DURAIMURUGAN SAY ABOUY HOGENAKKAL ISSUE
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் என்ற ஓர் அறிவிப்பை கண்டு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் வெகுண்டெழுந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று ஓர் அறிவிப்பை செய்திருக்கிறார்.
குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம் என்று தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும் சரி சட்டப்பூர்வமான அடிப்படையிலும் சரி தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு.
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன். காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்குகிற பொழுது, முதலில் காவிரி பாயும் மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலமும் காவிரி பாசன பகுதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதற்குரிய விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை பகிர்ந்தளித்தார்கள்.
அடுத்ததாக, காவிரி நதி நீர் ஆணையம் 5.2.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பில் நிகர குடிநீர் தேவைக்காக 2.2 டி.எம்.சி நீர் ஒதுக்கியுள்ளது. அதாவது, சுமார் 11 டிஎம்சி காவிரி நீரிலிருந்து குடிநீருக்காக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இப்படி, அனைத்து பங்களிப்பும் முடிந்து பிறகும் எஞ்சிய நீர்ப்பங்கீட்டின் கீழ் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நமக்கு கிடைத்தது 25.71 டி.எம்.சி.
16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது. மேலும், இந்திய மற்றும் தமிழ்நாட்டின் நீர்வள கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குதான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இறுதி தீர்ப்பு உட்பிரிவு 18-ன்படி இம்மாதிரியான அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை உபயோகப்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆக, எப்படி பார்த்தாலும், காவிரி-ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
இறுதியாக ஒன்று, வீட்டுப் பயன்பாடு, உள்ளாட்சிப் பயன்பாட்டு விநியோகம், தொழில்சார் விநியோகம் என்பன போன்ற காரணங்களுக்காக ஒரு மாநிலத்தால் எந்தவொரு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டாலும், அது அந்த நீராண்டல் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் பயன்பாட்டுக் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்பது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் முடிவாகும்." என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
TN MINISTER DURAIMURUGAN SAY ABOUY HOGENAKKAL ISSUE