திமுகவிற்காக உழைத்தவர்கள் கடைக்கோடியில் நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்! உதயநிதிக்கு அதிர்ச்சி கொடுத்த அறிக்கை! - Seithipunal
Seithipunal



திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? இதுதான் இந்த திராவிட மாடலின் சாதனையாக பார்க்க முடிகிறது என்று, வி.கே.சசிகலா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை நம்பவைத்து, அதன்மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து தற்போது 19வது மாதத்தில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் முடிசூட்டும் விழாவையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இதுதான் இந்த திராவிட மாடலின் சாதனையாக பார்க்கமுடிகிறது.

திமுகவினர் தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததை எல்லாம் சொல்லி மக்களுக்கு ஆசையைக் காட்டி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார்கள் திமுக இதை காலகாலமாக செய்து வருகிறது.

அதன்பின் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள். மக்களுக்கு எந்த பலனும் போய் சேராது. ஆனால், தங்களுடைய சொந்த வேலைகளை சரியாக செய்து கொள்வார்கள். திரும்ப ஐந்து வருடம் கழித்து தேர்தல் வரும்போது எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். இவர்களைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது மந்திரிசபை மாற்றம் என்ற நாடகத்தை நடத்தி முடி சூட்டும் விழாவை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே, ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கும்போதே ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அனைவரும் ஒரு அமைச்சருக்கு உள்ள அந்தஸ்தை கொடுத்து, புதிய பேருந்து போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த நாடகத்தையும் நாம் பார்த்தோம். அதேபோல் அமைச்சர்களும் சொல்லி வைத்தார் போல் புகழ்ந்து பேசி துதிபாடும் நாடகங்களும் நம்மால் பார்க்கமுடிந்தது. இதைத்தான் இவர்கள் திராவிட மாடல் ஆட்சி என்று அனுதினமும் மார்தட்டி கொள்கிறார்கள்.

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்படியல்ல. புரட்சித்தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்திலும் சரி ஒரு எளிய தொண்டரையும் பதவி கொடுத்து அங்கீகரிக்கும் கட்சியாக இருந்து வந்துள்ளது. நானும் இதைப் பின்பற்றிதான் இதுநாள் வரை வந்து இருக்கிறேன். 

எனவே, நாங்கள் தான் உண்மையான திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை என்னால் தலைநிமிர்ந்து பெருமையோடு சொல்லிக்கொள்ள முடியும். 

இதை தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.இப்போது புயல், மழை, வெள்ளம், விவசாயிகள் படும்பாடு, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது, வீடு வாசலை இழந்து தங்குவதற்கு இடம் இன்றி தவிக்கும் மக்கள் ஒருபக்கம், குடியிருக்கும் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலைமை, வீடுகளை இழந்துள்ளவர்கள் ஒருபுறம் என்று தமிழகத்தின் இன்றைய நிலைமை இப்படி இருக்க, மக்கள் பணிகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவசரகால பணியாக முடிசூட்டும் விழா நடக்கிறது. தமிழக மக்களிடம் இவர்கள் போடும் பகல் வேஷம் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தங்கள் ஆட்சி முடிவதற்குள் வரிசையில் உள்ள அடுத்த வாரிசின் முடிசூட்டு விழாவும் நடத்தேறும்.

இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் நினைத்து பார்க்கிறேன். புரட்சித்தலைவர் அவர்கள் தன்னுடைய வாரிசாக தமிழக மக்களைத்தான் பார்த்தார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தமிழக மக்களையும் தொண்டர்களையும் தனது உயிர்மூச்சாக பார்த்தார்கள். அதேபோன்று எங்கள் இருபெரும் தலைவர்களின் வழியில், கழகத் தொண்டர்களையும், தமிழக மக்களையும்தான் நானும் பார்க்கிறேன்.

ஜனநாயகத்தில் மன்னராட்சியை கொண்டு வந்த பெருமை திமுகவையே சேரும். திமுகவிற்காக பாடுபட்ட எத்தனையோ அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள், திறமையானவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் வாய் திறக்கமுடியாமல் மௌனமாக இருக்க வேண்டிய நிலைக்கு இன்றைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

எனவே, திமுகவிற்காக உழைத்தவர்கள் கடைக்கோடியில் நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான். இதைத்தான் இவர்களது திராவிட மாடலாக பார்க்கமுடிகிறது. இதுபோன்று, சொந்த கட்சியினருக்கே துரோகம் இழைத்ததை கண்டு பொறுக்க முடியாமல் தான், அன்றைக்கு புரட்சித்தலைவர் அவர்கள் தனி இயக்கம் கண்டார். தமிழக மக்களும் காப்பாற்றப்பட்டார்கள். அதே இயக்கம் ஒரு மிகப்பெரிய வலிமையுடன் புது அவதாரம் எடுத்து, எழுந்து நிற்கும் காலம் விரைவில் வர போகிறது. அந்த உன்னத பணியினை நானே முன்னின்று நிறைவேற்றி காட்டுவேன். அன்றைக்கு இந்த மன்னராட்சி அழிந்து ஜனநாயகம் உயிர்பெறும். அது மக்களாட்சியாக இருக்கும். இது உறுதி." என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister Udhayanithi Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->