மாண்புமிகு மன்னராட்சி முதல்வரே... CM ஸ்டாலினின் தாத்தா பேரையும் சேர்த்து சொல்லி கொந்தளித்த விஜய்!
TVK Vijay DMK MK Stalin
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் வணக்கம்!" என்று பேச ஆரம்பித்தார்.
"தமிழுக்கு அமுதென்று பேர்... அந்த தமிழன்பு, தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! இன்று தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலையில், நாம் புதிய வரலாறு உருவாக்க தயாராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
அரசியல் என்றால் ஒவ்வொரு குடும்பமும் நலமாக வாழ வேண்டும் என்பதா? இல்லை, ஒரே குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி வாழ வேண்டும் என்பதா? எது அரசியல்? எல்லோரும் செழிக்க வேண்டும் என்பதுதான் உண்மையான அரசியல் – அதுவே நம் அரசியல்!
'கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்' என்று பேசும் இவர்கள், மக்கள் பிரச்சனைகளை மறைத்து, தங்களின் மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சியாக நடத்துகிறார்கள். மாநாடு, புத்தக வெளியீடு, பரந்தூர் விவகாரம், தொடக்க விழா, பொதுக்குழு – எங்கெல்லாம் தடைகள்?! ஆனால், தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு எதையும் தடுக்க முடியாது!
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று உங்கள் பெயரை வீரப்புடன் சொன்னாலே போதுமா? செயலிலும் அதை நிரூபிக்க வேண்டும்!
பாஜகவை பாசிசம் என்று அடிக்கடி விமர்சிக்கும் நீங்கள் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுக்கும் தடையிடும் பாசிச ஆட்சி நடத்துபவர்கள் அல்லவா? நீங்கள் யார், என்னை, என் கழகத்தினரை, என் மக்களை சந்திக்கத் தடுக்க?" என்று ஆவேசமுடன் பேசினார்.