அதிமுக-பாஜக கூட்டணி: விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி! நாங்க தான் இனிமே! விஜய் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


மக்கள் விரோத மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பா.ஜ.க.வும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? 

ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். 

ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள், பா.ஜ.க. - தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன.

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை..

பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.

2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 'நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.க.வும், 'தாங்கள்தான் பா.ஜ.க.விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது.

தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். அதை நிரூபிக்கும் விதமாக, தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர்.

நாம், ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான்.

மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், வீறுநடை போடுகின்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக,
தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள்.

எனவே, பிளவுவாத பா.ஜ.க. மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி!

அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay say about ADMK BJP Alliance DMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->