ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது ஏன்.? அதன் சிறப்புகள் என்னென்ன.?
Ayutha pooja festival history
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றை கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.
நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.
ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.
இந்த நாளே ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை என்றால் என்ன?
துர்க்கை அம்மனுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மகிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்க்கை. இந்த நாளையே துர்க்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர். 9 நாட்கள் சண்டை, மகிஷாசுரன் வதத்துடன் வெற்றிப்பெறுவதால் 10வது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகின்றோம்.
ஆயுத பூஜை சிறப்பு :
செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும்.
ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.
சரஸ்வதி பூஜை :
கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.
சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.
இந்த நாளில் வழிபட வேண்டிய தெய்வங்கள் :
ஆயுத பூஜையன்று அறிவாற்றலை வழங்கும் சரஸ்வதி தேவி
தூய்மை உள்ளத்தை வழங்கும் பார்வதி தேவி மற்றும்
செல்வ செழிப்பை அளிக்கும் லட்சுமி தேவி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.
English Summary
Ayutha pooja festival history