தினம் ஒரு திருத்தலம்... எட்டு கரங்களுடன் சிவதுர்க்கை.. விநாயகருக்கு தாலி கட்டி வேண்டுதல்.!
Thinam oru thiruthalam
அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில்:
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில், மோகனூர் என்னும் ஊர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயிலில் மூலவரான சிவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் மதுகரவேணியம்பிகை கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
இத்தலத்திற்கு அருகில் காவிரி நதி, காசி போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. காவிரியைப் பார்த்தபடி சுவாமி காட்சி தருகிறார். இத்தலத்தில் முருகப்பெருமானுடன் வள்ளி மற்றும் தெய்வானை காட்சியளிக்கிறார்கள்.
கார்த்திகைக்கு முதல் நாளில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இத்தலத்தில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது.
வேறென்ன சிறப்பு?
அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயிலில் விநாயகர், ஐயப்பன், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, பைரவர், சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் மற்றும் நவகிரகங்கள் ஆகியோருக்கு சன்னதிகள் அமைந்துள்ளது.
இத்தலத்தில் காலபைரவருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. வராஹி, வைணவி, சாமுண்டி ஆகிய மூன்று தேவியரும் பிரகார சுவரில் புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கின்றனர்.
அம்மன் மதுகரவேணியம்பிகை சன்னதிக்கு முன்மண்டபத்திலுள்ள ஒரு கல்லில் சிவதுர்க்கை எட்டு கரங்களுடனும், பின்புறத்தில் ஆடு வாகனத்துடனும் காட்சியளிக்கிறார். துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது சிறப்பு.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது?
கார்த்திகை பரணியில் தீபத்திருவிழா, சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பௌர்ணமிதோறும் அம்மன் மதுகரவேணியம்பிகைக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அந்நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால், புத்திரப்பேறு உண்டாவதாக நம்பிக்கை.
கோயிலுக்கு வெளியே வேம்பு மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.
காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டியவை நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.