வாயு தலம்..வெள்ளைக்கல் நந்தி.. பித்தளை நந்தி..அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில்..!
Today special Andhra Pradesh kalathiyappar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி என்னும் ஊரில் அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 45 கி.மீ தொலைவில் காளஹஸ்தி உள்ளது. காளஹஸ்தி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயிலில் மூலவரான காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
இத்திருக்கோயிலானது வாயு (காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும்.
கோயிலின் நுழைவு வாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுடைய கொடிமரம் ஒன்றும் உள்ளது.
இத்தலத்தில் பக்தர்களுக்கு திருநீறு (விபூதி) பிரசாதமாக வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.
வேறென்ன சிறப்பு?
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252வது தேவாரத்தலம் ஆகும்.
மூலவரான காளத்திநாதரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் காணப்படும்.
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயிலின் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் போன்ற சன்னதிகளும் அமைந்துள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இத்திருக்கோயிலில் மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமைதோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகாசிவராத்திரி 10 நாள் உற்சவம், திருத்தேர் பவனி, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்திருக்கோயிலில் பிரார்த்தனை செய்யலாம்.
இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அந்த தீர்த்தத்தை அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயிலில் வேண்டுதல் நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
English Summary
Today special Andhra Pradesh kalathiyappar temple