தினம் ஒரு திருத்தலம்..சிறுமி வடிவத்தில் அம்மன்..அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில்.!
Today special arulmigu Sri Vidya rajarajeswari temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
சென்னை மாவட்டம் பழவந்தாங்கல் நங்கநல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னை மாவட்டத்தில் உள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள நேரு காலனியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நேரு காலனியிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயிலில் மூலவரான ராஜராஜேஸ்வரி அம்மன் ஒரு சிறுமி வடிவத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.
இத்திருக்கோயிலின் முன்புறத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
வேறென்ன சிறப்பு?
மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் 6 மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக்கச் செய்யும் அற்புதம் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது. இதுவே, இத்தலத்தின் சிறப்பாகும்.
ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
நவராத்திரி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் சூரிய வழிபாடு போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கல்விச் செல்வத்துடன் பொருட்செல்வமும் பெற்று வாழ இத்திருக்கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயிலில் வேண்டியவை நிறைவேறியவுடன் இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும், சிறப்பு அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
English Summary
Today special arulmigu Sri Vidya rajarajeswari temple