தினம் ஒரு திருத்தலம்.. 6 அடி உயரமுள்ள பிள்ளையார்.. குடைவரை கோயில்.. கற்பக விநாயகர் திருக்கோயில்.!
Today special pillaiyarpatti vinayagar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி என்னும் ஊரில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சிவகங்கையில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் பிள்ளையார்பட்டி என்னும் ஊர் உள்ளது. பிள்ளையார்பட்டியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்க பெற்றதால் இங்கு கற்பக விநாயகர் சன்னதியை வலம் வர இயலாது. சுமார் 6 அடி உயரமுள்ள கற்பக விநாயகர் சிவபெருமானை நோக்கி தவம் செய்த வண்ணமாக காட்சியளிக்கிறார்.
கற்பக விநாயகர் தனது வலது கரத்தில் சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள கச்சையின் மீது வைத்துக் கொண்டும் அமர்ந்திருக்கிறார்.
பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.
திருமண வரமளிக்கும் கார்த்தியாயினி அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் நாகலிங்கம் சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களையும் அளிக்கும் பசுபதீஸ்வரர் சன்னதியும் இங்கு அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு?
குடைவரை கோயிலின் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது.
கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் ஏழு நிலைகளுடன் அமைந்துள்ளது.
கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரை கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி கோயிலாகவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரை கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் 5வது படை வீடாகும்.
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று.
இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அளவில் முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்படுவது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி 10 நாள் திருவிழாவாக மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்தி, கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், அருகம்புல் மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special pillaiyarpatti vinayagar temple