தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?!
Why theemithi Thiruvizha celebrate
தீ மிதித்தல்:
திருவிழாக்களில் தீ மிதித்தல் நடப்பதைப் பார்த்திருக்கிறோம். தீ மிதித்தல் என்பது தமிழ்நாட்டில் பல கோவில்களில் நடைபெறுகிறது.
தீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக்கடன்களில் ஒன்றாகும். இதனை அக்னி குண்டம் இறங்குதல், பூ மிதித்தல் என்ற பல பெயர்களில் அழைக்கின்றார்கள். இவ்வாறு தீ மிதிப்பவர்களை மருளாளிகள் என அழைக்கின்றார்கள்.
மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்கு தீயும், பூவும் ஒன்றாக தெரியும். இதனால் தான் தீ மிதித்தலை, பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள். நம்பிக்கை இல்லாமலோ அல்லது சோதித்துப் பார்க்கவோ பூக்குழி இறங்கினால் கஷ்டம்தான்.
எவ்வாறு கொண்டாட வேண்டும்?
தீ மிதித்தலுக்காக காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருக்கின்றார்கள். அம்மன் கோயில்களின் முன்பு தீ மிதித்தலுக்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக்களின்போது, சாமியாடிக் கொண்டு நீர்நிலைகளிலிருந்து நீராடி மாலையணிந்து பூக்குழிக்கு வருகின்றார்கள். பக்தியின் பரவசத்தில் இருந்துகொண்டு வரிசையாக பூக்குழிக்குள் இறங்குகிறார்கள்.
இவ்வாறு பூக்குழி இறங்குவதற்கு முன்னர் பூக்கள், விறகுகள், சூடம் போன்றவை நேர்த்திக்கடன்களாக செலுத்தப்படும்.
அதன்பின் அக்னி குண்டத்தின் முன் மற்றும் பின் பகுதியில் ஒரு சிறு தொட்டியை அமைப்பார்கள். அதில் பின் பகுதியில் தண்ணீரும், முன்பகுதியில் பாலும் இருக்கும். இவற்றில் பக்தர்கள் பாலை நேர்த்திக்கடனாக ஊற்றுவார்கள்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா?
பக்தர்கள் தீ மிதிப்பதற்கு முன்பு நீரால் கால்களை பலமுறை கழுவி படுக்கையைச் சுற்றி வருவார்கள். நீரில் கழுவிய கால் மண்ணில் பட்டால் அதில் உள்ள அழுக்கு காலில் ஒரு அடுக்கை உண்டாக்கும். இந்த அழுக்கு நெருப்பிற்கும், காலிற்கும் இடையில் இருந்து கால் விரைவில் சூடேறுவதைத் தடுக்கிறது.
மேலும் பூக்குழி இறங்குபவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, அதில் விழுந்தாலோ அவை அபசகுனமாக கருதப்படுகிறது.
தீக்குழி:
தீக்குழியானது 10அடி முதல் 12அடி நீளம் இருக்கும். ஆனால் 20அடிக்கு மேல் இருக்காது. கட்டைகளைப் போட்டு எரிய விட்டு அது எரிந்தவுடன் தணலால் ஆன கரியாக இக்குழி இருக்கும்.
இதைப் பகலில் பார்த்தால் கரியின் மீது சாம்பல் படிந்திருப்பது நன்கு தெரியும். பொதுவாக இந்த நிகழ்ச்சி இரவில் மட்டுமே நடத்தப்படுகிறது. இரவில் இது ஒளிரும் சிகப்பு விளக்காக தெரியும்.
பூக்குழி இறங்கிய பின் கல் உப்பை பூக்குழியின் மீது கொட்டுவார்கள். இது காற்றில் உள்ள ஈரத்தை இழுத்துக் கொள்ளும்.
அறிவியல் உண்மை:
தீ மிதிப்பவர்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் தான் மிதிப்பர். ஆடி மாதம் என்பது வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில் பலவிதமான நோய் தொற்றுக்கள் எளிதில் உண்டாகும்.
இந்த மாதத்தில் தீ மிதிப்பதால் உடலின் பல நோய்கள் நீங்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவே தான் பழங்காலத்தில் மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு காலில் சூடு வைத்து குணப்படுத்தப்பட்டது. இதுவே தீ மிதித்தலுக்குப் பின் உள்ள அறிவியல் உண்மையாகும்.
English Summary
Why theemithi Thiruvizha celebrate