ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆரம்ப கட்ட ஆட்டங்களை தவறவிடும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள்.!
IPL Foreign Players
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அடுத்த சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் தொடரில் இந்த ஆண்டு புதியதாக இரு அணிகள் இணைய உள்ளன. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 5-ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. வங்கதேச அணி ஏப்ரல் 12-ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. இந்த சுற்றுப் பயணம் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறும். சர்வதேச நாடுகளின் இந்த சுற்றுப்ப்யணம் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.