திருவண்ணாமலை அருகே பரிதாபம்..! ஏரியில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி..! மீன்பிடிக்க சென்றபோது விபரீதம்..!
2 workers drowned lake in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற இரண்டு தொழிலாளிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் குங்கிலியநந்தம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சுப்பிரமணி (42). இவரும், இவரது உறவினரான விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஏழுமலை (37) என்பவரும் கொட்டையூரில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதையடுத்து மீன் பிடிக்க சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் இவர்கள் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் ஏரிக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது ஏரிக்கரையில் அவர்களது உடமைகள் மற்றும் செல்போன் மட்டும் இருந்துள்ளது. ஆனால் அவர்களை காணவில்லை என்பதால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து வாணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இரண்டு பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலையும் தேடும் பணி நடைபெற்ற நிலையில் அவர்களது உடல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இருவரிடம் உடல் ஏரியின் ஒரு பகுதியில் மிதந்துள்ளது. இதைப்பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 workers drowned lake in Tiruvannamalai