நில அபகரிப்பால் விழுப்புரம் விவசாயி தற்கொலை: எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
ADMK EPS Condemn to DMK Govt Vilupuram Farmer death
விழுப்புரம் மாவட்டம், கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ் பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். செஞ்சி வட்டத்திற்குட்பட்ட தேவனூர் கிராமத்தில் மோகன்ராஜின் சகோதரர் செல்வம் என்பவருக்கு சொந்தமாக 27 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த நிலத்தை செல்வம் பெயரில் அவரது குடும்பம் வாங்கியுள்ளது. அந்த நிலத்தில் மோகன்ராஜ் கடந்த 8 ஆண்டுகளாக வேளாண்மை செய்து வருகிறார்.
செல்வத்திற்கு சொந்தமான இடத்திற்கு அருகில் நிலம் வைத்திருக்கும் தேவராஜ் என்பவர், அவரது நிலத்திற்கு செல்வத்தின் நிலம் வழியாகத் தான் கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மோகன்ராஜ், செல்வம் உள்ளிட்டோர் அனுமதி அளிக்காத நிலையில், காவல்துறை, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் துணையுடன் மோகன்ராஜுக்கு பல வழிகளில் தேவராஜ் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
கடந்த 25 ஆம் தேதி சம்பந்தப்பட்ட நிலத்தை மேல்மலையனூர் வட்டாட்சியர் வளர்மதி தலைமையில் துணை வட்டாட்சியர், மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர் அடங்கிய குழு நிலத்தை ஆய்வு செய்து அந்த நிலம் மோகன்ராஜின் அண்ணன் செல்வத்துக்கு சொந்தமானது என கூறியுள்ளனர். ஆனாலும் அதை தேவராஜும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஏற்கவில்லை.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், மோகன்ராஜ், 27 ஆம் தேதி பிற்பகலில் தமது நிலத்தைப் பறிக்கும் நோக்குடன் தொடர்ந்து தமக்கு தொல்லை கொடுத்து வந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட 23 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து விட்டு, அங்கேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட மோகன்ராஜ் மருத்துவம் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையின் போது விவசாயி ஒருவர் தீக்குளித்து இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பொய் வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன் அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை முற்றிலும் மறந்ததோடு அல்லாமல், நதிநீர் உரிமைகள் முதல் மின்சார விநியோகம் வரை அனைத்திலும் தொடர்ச்சியாக விவசாயப் பெருங்குடி மக்களை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், இனி ஒரு விவசாயியும் அரசின் வஞ்சிப்பால் தன்னை வருத்திக் கொள்ளா வண்ணம் விவசாயிகளின் குறைகளை தீர்த்துவைக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to DMK Govt Vilupuram Farmer death