முதல்வர் ஸ்டாலின் வாயால் வடை சுடுவதை நிறுத்த வேண்டும்! ரூ.4500 கோடி கொள்ளை குறித்து விளக்கம் என்ன? - ஆர்பி உதயகுமார்!
ADMK RP Udhayakumar Condemn to DMK Govt Sand Robbery case ED
தமிழகத்தில் சுமார் 4500 கோடி ரூபாய் அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும், இந்த மணல் கொள்ளை குறித்து இதுவரை முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என்றும், முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் தெரிவிக்கையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 66 பேர் பலியான சம்பவ சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம்.
ஏற்கனவே கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார். அப்போதே முதலமைச்சர் பாடம் கற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் கோட்டை விட்டுவிட்டார். இப்போது கூட கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த பிறகு கூட, விழுப்புரம், திருவெண்ணைநல்லூர் அருகே கள்ளச்சாராயத்தார் ஒருவர் பலியாகி உள்ளார்.
கள்ளச்சாரத்தை ஒழித்து விடுவதாக முதல்வர் ஸ்டாலின் வாயால் வடை சுடுவது போல் இல்லாமல், அதனை செய்து காட்ட வேண்டும். தமிழகத்தின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தான் தமிழக காவல்துறை உள்ளது. ஆனால் போதைப் பொருட்களை கடத்துதல், கொலை, கொள்ளை என நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
தமிழகத்தின் கரூர், திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடந்துள்ளது. 28 இடங்களில் மட்டுமே மணல் அல்ல அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், சுமார் 987 ஹெக்டர் அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது.
ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் கொள்ளை நடப்பதற்கு முன்பும், மணல் கொள்ளை நடந்ததற்கு பின்பும் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் கணக்கின்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சட்டவிரோதமாக 4730 கோடி ரூபாய் அளவிற்கு மணல் கொள்ளை நடந்துள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு வெறும் 36 கோடி ரூபாய் தான் செலுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை" என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.
English Summary
ADMK RP Udhayakumar Condemn to DMK Govt Sand Robbery case ED