மீண்டும் ஒரு சம்பவம்..ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
Again, an incident. Teenage girl molested on moving train
திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஒருவர் கைதானார். இதையடுத்து அந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் அருகே ரெயிலில் மீண்டும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று அவரது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவரை பார்ப்பதற்காக தூத்துக்குடியில் இருந்த ஈரோட்டுக்கு ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்துள்ளார்.
அப்போது அந்த ரெயிலில் விருதுநகர் ரெயில் நிலையத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பெயிண்டர் சதீஷ் குமார் என்ற இளைஞர் ஏறியுள்ளார். இந்த நிலையில் ரெயிலானது திண்டுக்கல் கொடை ரோடு அருகே வந்தபோது, மதுபோதையில் இருந்த சதீஷ் குமார் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் 139 உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரளித்தார்.
இதையடுத்து இது குறித்து திண்டுக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயிலை ஆய்வு செய்த போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சதீஷ் குமாரை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மீண்டும் ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Again, an incident. Teenage girl molested on moving train