மூன்றாவது நாளாக தொடரும் அவலம்.. அலட்சியம் காட்டும் ஆவினுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணா நகர், மதுரவாயல், திருவேற்காடு, கொரட்டூர் உள்ளிட்ட பகுதியில் ஆவின் பால் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. தாமதமாக கிடைக்கும் ஆவின் பாலும், சில சமயங்களில் கெட்டுப்போவதாக கூறும் இல்லத்தரசிகள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் வழங்கல் பாதிப்பு; கொள்முதல் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த நடவடிக்கை தேவை! 

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆவின் பால் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் தான் சென்னைக்கு வழங்கப்படுகிறது. ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம் ஆகும். ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது; அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நேற்று உறுதியளித்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஆவின் பால் வழங்கல் பாதிக்கப்பட்டிருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.

அமுல் நிறுவனத்தின் வருகையும், தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை உயர்வும் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதித்திருக்கின்றன என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இந்த பாதிப்புகளை போக்கி, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு கொள்முதல் விலையை உயர்த்துவது மட்டும் தான் ஒரே தீர்வு. இதை செய்யாவிட்டால் நாளுக்கு நாள் ஆவின் பால் கொள்முதல் மோசமடைவதை தவிர்க்க முடியாது.

ஆவின் நிறுவன சிக்கலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். மற்றொருபுறம் ஆவின் பால் வணிகத்தையும் பெருக்கி தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை 50% அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anbumani condemned interruption of aavin milk supply in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->