ஜெயலலிதா மரண வழக்கு! இரண்டாவது நாளாக அப்பல்லோ மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.!
Apollo doctors appeared in enquiry commission
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா உறவினர் இளவரசி, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட 156 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் ஆஜராகி விட்டதால் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் மறு விசாரணை நடைபெறும் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருன் பேரின் வாக்கு மூலங்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், மறு விசாரணை செய்ய அப்பல்லோ வழக்கறிஞர் மஹி மூனா பாஷா கோரினார். இந்த மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.
இதன்படி நேற்று, இன்று, நாளை என 3 நாட்களுக்கு மறுவிசாரணை நடத்தப்படுகிறது. நேற்றைய தினம் அப்பல்லோ மருத்துவர்கள் தவபழனி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இன்று மருத்துவர்கள் பால் ரமேஷ் மற்றும் நரசிம்மன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த விசாரணையின் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
நாளையும் அப்பல்லோ மருத்துவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மறு விசாரணையுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை முடிவுற்றதும் அது தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
English Summary
Apollo doctors appeared in enquiry commission