கலைஞர் கனவு இல்லம்..421 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார் எம்எல்ஏ மகாராஜன்!
Artists Dream Home MLA Maharajan distributes orders for construction of houses for 421 people
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 421 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை நேற்று எம்எல்ஏ மகாராஜன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஆண்டிபட்டி நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வீடு கட்டுவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 421 பயனாளிகளுக்கு நேற்று கட்டிடம் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டு மக்களுக்காக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி பொதுமக்களும் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ மகாராஜன் தெரிவித்தார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ.3.50 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன். இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போஸ், சரவணன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிராம ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Artists Dream Home MLA Maharajan distributes orders for construction of houses for 421 people