போகிப்பண்டிகை.. காப்பு கட்ட உகந்த நேரம்.. இந்நாள் ஏன் ஸ்பெஷல்?
bhogi kappu kattu time
போகி மார்கழி மாதத்தின் கடைசி நாள், அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும்.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.
பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அதுமட்டுமல்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுப்படுத்துவது தமிழர் பண்பாடு.
இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுவிடும் நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.
காப்பு கட்ட உகந்த நேரம் :
காலை 09.46 முதல் 11.16 வரை
காப்பு கட்டுதல் :
போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதன் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தமாகிய வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காகவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.
மா இலை காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும். சீரான சிறுநீர்போக்கு ஏற்படுத்தும். விஷ முறிவுக்கு உதவும். வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை தடுக்கும். ஆவாரம்பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும். தும்பை செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.
இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :
மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாக திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.
பழைய பொருட்களை எரித்தல் :
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துவார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். மனதில் இருக்கும் துயரங்களை அழிப்பதால் இப்பண்டிகையை போக்கி என்றனர். போகியன்று அந்த பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகும்.