பாமக வழக்கறிஞர் பாலு முன் வைத்த வாதத்தின் எதிரொலி! சில மணி நேரங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல்! மீண்டும் சாதித்து காட்டிய பாமக!
Chairperson of BC Commission was appointed due to pmk case
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக செய்தி தொடர்பாளரும் சமூக நீதி பேரவை தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. மத்திய அரசு கடந்த 9 மாதங்களாக தேசிய ஆணைய தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாததால் பிற்படுத்தப்பட்ட மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில் உள்ளது.
அரசியல் சாசன அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் "தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் மட்டும்தான் வரையறுக்கப்பட்டு உள்ளது. அவர்களின் பதவி காலம் முடிந்த பிறகு அடுத்ததாக நியமிக்கப்பட வேண்டியவர்களை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வித கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை.
பிற்டுத்தப்பட்டவர்களின் நலனுக்காக சுயநலமற்று பணியாற்றுபவர்களை கண்டறிவது மற்றும் சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்ட கருத்தில் கொண்டு நியமிக்க முடியும். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையும்" என மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு பாமக வழக்கறிஞர் கே.பாலு "24 மணி நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்க முடிந்த மத்திய அரசால் பத்து மாதங்கள் ஆகியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏன் நியமன செய்ய முடியவில்லை? மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய காலியிடங்களை மத்திய அரசு உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும்" என தனது வாதத்தை முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் பாமக வழக்கறிஞர் கே.பாலு முன்வைத்த வாதத்தின் எதிரொலியாக அடுத்த சில மணி நேரங்களில் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஹாயிர் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பத்து மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பதவி பாமக தொடர்ந்த வழக்கில் பாமக வழக்கறிஞர் கே.பாலு முன் வைத்த வாதத்தின் காரணமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chairperson of BC Commission was appointed due to pmk case