பங்குத் தொகை விடுவீங்க - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திறன்மிகு குழந்தைகள் மையம் (Mission Saksham Anganwadi & POSHAN 2.0), மகளிர் சக்தி இயக்கம் (Mission Shakthi) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் (Mission Vatsalya) போன்ற ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு, 29-1-2025ஆம் நாள் நிலவரப்படி ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நேர்வுகளில், ஒன்றிய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், நிதியாண்டின் முடிவிற்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், ஒன்றிய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகை ஒன்றிய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin letter to Central Minister Annaporna Devi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->