ஆன்லைன் மோசடி தவிர்க்க "சைபர் பள்ளிக்கூடம்" என்ற புதிய திட்டம்!
Cyber school TN Police
நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "சைபர் பள்ளிக்கூடம்" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்பு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண்களைப் பெற்று மோசடி செய்தனர். தற்போது புதிய முறைகளில் மோசடிகள் நடைபெறுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, சைபர் குற்ற வழக்குகளை விசாரிக்க நாடு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை தென் மண்டலத்தில் உள்ளன. சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் கிளப் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சைபர் கிளப் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே, சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், ஓடிபி உள்ளிட்ட தகவல்களை யாருக்கும் கூற வேண்டாம் என்றும், அறிமுகம் இல்லாதவர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். டிஜிட்டல் கைது என்று கூறி யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்றும், பணம் இழந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.