தேவர் குருபூஜை எதிரொலி - தீவிர ஆலோசனை நடத்தும் மாவட்ட ஆட்சியர்.!
Devar Jayanti festival preparations consultation meeting in collector office
தேவர் குருபூஜை எதிரொலி - தீவிர ஆலோசனை நடத்தும் மாவட்ட ஆட்சியர்.!
வருகிற 30 ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு அமைப்புகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேவர் ஜெயந்தியின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு சந்திரன், "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் எந்த ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு விதமான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதை முன்னிட்டு அந்த மக்களும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் பேனர் வைப்பதை தடுத்திடவும், அரசு கட்டிடங்களில் விளம்பரம் செய்வதை தவிர்த்திடவும் வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக நடந்திட உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
Devar Jayanti festival preparations consultation meeting in collector office