அடுத்து என்ன டோர் டெலிவெரியா? அருவருப்பான செயல் - தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி இராமதாஸ்!
DR Anbumani Ramadoss Condemn liquor Vending Machine
தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதை நினைக்கவும், பேசவுமே அருவருப்பாக உள்ளது. இது சட்டவிரோதம் என்று, pபாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் 4 தனியார் வணிகவளாகங்களில் டாஸ்மாக்கின் தானியங்கி மதுவிற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கடன் அல்லது பற்று அட்டை மூலம் பணம் செலுத்தி, தொடுதிரை கணினியில் விரும்பிய மது வகையை தேர்வு செய்தால் அடுத்த வினாடி அந்த மதுபுட்டி, ஏ.டி.எம்.களில் பணம் வருவதைப் போன்று நமது கைகளுக்கு வந்து விடுமாம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இத்தகைய விற்பனை நிலையங்களை திறக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை நினைக்கவும் பேசவுமே அருவருப்பாக உள்ளது. இது சட்டவிரோதம் ஆகும்.
டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால், அதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; விற்பனையாளர்களின் மேற்பார்வையில், கடைகளுக்கு உள்ளேயே இந்த எந்திரம் வைக்கப்பட்டிருப்பதால் 21 வயதுக்கு குறைவானவர்கள் எந்திரத்திலிருந்து மதுவை எடுக்க முடியாது என்று டாஸ்மாக் விளக்கம் அளித்திருக்கிறது. அது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அதிக விலைக்கு மது விற்கப்பட்டால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மதுக்கடைகளை மூடிவிடலாம்.
அதை விடுத்து தானியங்கி மது வழங்கும் எந்திரம் வைப்பதாகக் கூறுவது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல். தானியங்கி எந்திரத்தை மது விற்பனையாளர்கள் எல்லா நேரமும் கண்காணிக்க முடியாது. அதனால் குழந்தைகள் பணத்தை செலுத்தி எளிதாக மதுவை எடுத்துச் செல்ல முடியும்.
தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பதே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகும். எந்த ஒரு வணிகத்திலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் போது அதைப் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ஏற்படுவது இயல்பு. தானியங்கி மது வழங்கும் எந்திரங்களுக்கும் அது பொருந்தும்.
அதனால் அதிகமாக மது விற்பனையாகும்; குடிப்பழக்கமும் அதிகரிக்கும். இந்திய அரசியல் சட்டத்தின் 47 ஆவது பிரிவுக்கும், முதலமைச்சர் அறிவித்த நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) 3.5 பிரிவுக்கும் எதிரானது.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் புகையிலைப் பொருட்களை தானியங்கி எந்திரம் மூலம் விற்பனை செய்ய உலக சுகாதார நிறுவனம் (WHO) தடை விதித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது இந்தியாவிலும் தடையை நடைமுறைப்படுத்தினேன். அது மது விற்பனைக்கும் பொருந்தும். ஒரு மாநில அரசு மதுவிற்பனையை கட்டுப்படுத்தும் செயல்களில் தான் ஈடுபட வேண்டுமே தவிர, மதுவிற்பனையை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
ஒருபுறம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலுக்கும் எதிராக புதுப்புது வகைகளில் மது வணிகம் செய்யும் டாஸ்மாக் நிறுவனம், மற்றொருபுறம் அதுபற்றி பேசினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டுவது அப்பட்டமான எதேச்சதிகாரம் ஆகும். இத்தகைய மிரட்டல்களுக்கு பா.ம.க. அஞ்சாது. எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் அதை எதிர்கொண்டு முறியடிக்கவும், மதுவுக்கு எதிராக போராடவும் பா.ம.க. தயாராகவே உள்ளது.
தமிழ்நாடு அரசின் சிந்தனையும், செயல்பாடும் மது வணிகத்தை மேம்படுத்துவதிலும், ‘எங்கும் மது... எதிலும் மது’ என்ற நிலையை ஏற்படுத்துவதிலும் தான் உள்ளன. தானியங்கி மது விற்பனையை தொடங்கியுள்ள தமிழ்நாடு அரசு, அடுத்தக்கட்டமாக ஆன்லைனில் பதிவு செய்தால் வீட்டுக்கு வீடு மது விற்பனை செய்யுமோ? என்று அஞ்சத் தோன்றுகிறது.
அறிவியலும், தொழில்நுட்பமும் மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். சமூகத்தை சீரழிப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. தானியங்கி மது விற்பனை நிலையத்தை டாஸ்மாக் நிறுவனம் உடனடியாக மூட வேண்டும். இத்தகைய சட்டவிரோத மது விற்பனை நிலையங்களை எதிர்த்து பா.ம.க சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
DR Anbumani Ramadoss Condemn liquor Vending Machine