7.5% இட ஒதுக்கீடு | அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கும் தனியார் கல்லூரிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!
Dr Ramadoss Condemn to Private College
தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளிகளின் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதே கடினம் எனும் நிலையில், அந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்படுவதற்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்து விட்ட நிலையில், மாணவர் சேர்க்கையும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 31&ஆம் நாளுடன் முடிவுக்கு வரவிருக்கிறது.
ஆனால், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பான்மையினர், அவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டு விட்ட போதிலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தங்களின் இடத்தை உறுதி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். காரணம், தொடர்புடைய தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் கேட்டு நெருக்கடி தருவது தான்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவம், பொறியியல், கால்நடை அறிவியல், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி விடுகிறது.
அதையும் கடந்து ரூ.70,000 முதல் ரூ.90,000 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு சில தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இது நியாயப்படுத்த முடியாத அநீதியாகும்.
தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, அந்தக் கல்லூரிகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்துகிறது. அத்துடன் ஒவ்வொரு மாணவருக்கு ஆண்டு விடுதி மற்றும் உணவுக் கட்டணமாக ரூ.40 ஆயிரத்தை அரசு செலுத்துகிறது.
கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி விடும் நிலையில், ஆங்கிலப் புலமை, சிறப்புப் பயிற்சிகள், வளாக நேர்காணலுக்கான பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை செலுத்தும்படி அரசு பள்ளிகளில் படித்து, பொறியியல் படிப்புக்கு தேர்வான மாணவர்களை சில கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன.
அதேபோல், விடுதி மற்றும் உணவுக் கட்டணத்திற்காக அரசால் செலுத்தப்படும் ரூ.40,000 போதுமானது அல்ல என்று கூறும் கல்லூரி நிர்வாகங்கள், அதற்காக ஆண்டுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை கூடுதலாக செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கின்றன.
கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி விட்டதால், அவர்களை தனியார் கல்லூரிகள் சேர்த்துக் கொண்டே தான் ஆக வேண்டும். ஆனால், மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாத வரை அவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டு விட்டனர் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்குவதற்கு கல்லூரி நிர்வாகங்கள் மறுக்கின்றன.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகள். அவர்களால் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேருவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதைக் கருத்தில் கொண்டு தான் முந்தைய ஆட்சியில் மருத்துவப் படிப்பிலும், இப்போதைய அரசில் பிற படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அப்போதும் கூட அவர்களால் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாது என்பதால் தான், அவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. அத்தகைய சூழலில் பொருளாதார பின்புலமே இல்லாத மாணவர்களின் கூடுதல் கட்டணம் கேட்டு தொல்லை கொடுப்பது நியாயமல்ல.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் பொதுப்பிரிவு மாணவர்களிடமும், அவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம் தவிர்த்து சிறப்புப் பயிற்சிகளுக்காக ரூ.50,000 வரையிலும், விடுதிக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அந்தத் தொகையுடன் அரசு செலுத்தும் கட்டணத்தைக் கழித்து விட்டு பார்த்தால், தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் கேட்பது மிகவும் நியாயமானதாகவே தோன்றும். ஆனால், ஏழை & அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழங்கும் கடமை தனியார் கல்லூரிகளுக்கும் உண்டு என்பதால், அவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக தனியார் கல்லூரிகளின் நிர்வாகங்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். அவர்கள் தரப்புக் கருத்துகளையும் கேட்டு சிறப்புப் பயிற்சிகளுக்கான கட்டணத்தையும் அரசே செலுத்துவதா? அல்லது அந்தத் தொகையை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிப்பதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.
விடுதி மற்றும் உணவுக்காக அரசு செலுத்தும் பணத்தை கல்லூரி நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், அரசு பள்ளி மாணவர்களிடமிருந்து தனியார் கல்லூரி நிர்வாகங்கள் எந்த வகையிலும் பணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Condemn to Private College