சென்னையில் மின்சார பேருந்து சேவை - போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு.!!
electric bus service start in chennai
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நகரின் போக்குவரத்து தேவை அதிகரிப்பதாலும், காலாவதியாகும் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்பதாலும் தேவைக்கு ஏற்ப புதிய பேருந்துகள் வாங்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களில் புதிதாக வாங்கப்பட்ட தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், கடந்த 2023ம் ஆண்டு 500 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டது. இதேபோல், கடந்த ஆண்டு மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரப்பட்டது. மேலும் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு இரண்டாவது கட்டமாக 600 மின்சார தாழ்தள பேருந்துகள் வாங்க கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் கோரபட்டது.
இந்த நிலையில், மின்சார பேருந்துகள் தயாரான நிலையில் அவற்றை இயக்குவதற்கான கட்டமைப்புகளை நிறைவு செய்யும் பணி விரைவில் முடிக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் 100 மின்சார தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: "வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஐந்து பணிமனைகளிலும் மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் முழு வீச்சல் நடைபெற்று வருகிறது. மாற்றுத் திறனாளிகள், சிறியவர்கள் முதல் முதியவர்கள் என்று அனைவராலும் சுலபமாக ஏறி-இறங்கும் வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
English Summary
electric bus service start in chennai