7 பேரை பலிகொண்ட நெல்லை கொடூர விபத்து! முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!
Nellai Car Accident CM Stalin Announce
திருநெல்வேலி: நாங்குனேரி அருகே தளபதிசமுத்திரம் கிராமம், திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "நாங்குனேரி வட்டம், தளபதிசமுத்திரம் பகுதி-1 கிராமம், கீழூர் வீரநங்கை அம்மன் கோவில் அருகில் திருநெல்வேலி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (27.4.2025) மாலை சுமார் 5.00 மணியளவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த TN72 BP 2351 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றின் மீது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த TN02 AX 0321 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று தடம் மாறி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மேற்படி வாகனங்களில் பயணம் செய்த 16 நபர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை வட்டம், டக்கரம்மாள்புரம், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த திரு.தனிஸ்லாஸ் (வயது 68) த/பெ.பாலையா, திருமதி.மார்கரெட் மேரி (வயது 60) க/பெ.தனிஸ்லாஸ், திரு.ஜோபர்ட் (வயது 40) த/பெ.தனிஸ்லாஸ், திருமதி.அமுதா (வயது 35) க/பெ.ஜோபர்ட், குழந்தைகள் செல்வி.ஜோபினா (வயது 8), செல்வன்.ஜோகன் (வயது 2) மற்றும் இராதாபுரம் வட்டம், கன்னங்குளத்தைச் சேர்ந்த திரு.மேல்கேஸ் (வயது 60) த/பெ.ஜேசு ஆகிய 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.பாலகிருஷ்ணவேனி (வயது 36), திருமதி.அன்பரசி (வயது 32), செல்வி.பிரியதர்ஷினி (வயது 23), செல்வன்.சுபி.சந்தோஷ் (வயது 21), செல்வி.அட்சயாதேவி (வயது 19), செல்வன்.பிரவீன் (வயது 10) மற்றும் செல்வன்.அஸ்வின் (வயது 8) ஆகிய 7 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Nellai Car Accident CM Stalin Announce