ஈரோட்டில் தமிழக போலீசாரை அடித்து உதைத்த பிகார் மாநில தொழிலாளர்கள்.! 60 பேர் கைது, பதற்றம்.!
erode bihar labors attack tn police
பீகார் மாநிலம் ராம்குருவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணராம். இவரது மகன் காமோத்ராம் (வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம் பூர்ணா ஆயில் மில்லில் பாய்லர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது மனைவி சம்பா தேவி மற்றும் 2 குழந்தைகளுடன் மொடக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் காமோத்ராம் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.
அப்போது அவர் கம்பெனிக்கு ஆயில் லோடு ஏற்றுவதற்காக வந்த டேங்கர் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காமோத்ராம் உடலை அவசர ஊறுதி மூலம் எடுத்து செல்ல முயன்றனர். அப்போது 400-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஆலையின் முன்பு கூடி விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு தொகை வழங்கினால் தான் உடலை எடுத்து செல்ல அனுமதிப்போம் என்று தெரிவித்தனர்.
மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா தலைமையில் 7 காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆலை நிர்வாகத்திடம் இழப்பீடு தொகை வழங்க கோரி ஏற்பாடு செய்வதாகவும், உடலை எடுத்து செல்ல அனுமதிக்கும்படியும் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தொழிலாளர்கள் இழப்பீடு தொகை வழங்கிய பின்பு தான் உடலை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தொழிலாளர்களுக்கும் ஆலை நிர்வாகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களை கொண்டு போலீசார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் மீது தாக்க தொடங்கினர்.
இதில், காவல் ஆய்வாளர் தீபா உள்பட 7 காவல்துறையினர் காயம் அடைந்தனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 40 வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வன்முறையில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்தனர்.
மேலும், காமோத்ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English Summary
erode bihar labors attack tn police