மகளின் விருப்பத்தை ஏற்று சில்க் ஸ்மிதா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்..!!
Erode tea shop owner celebrate Silk Smitha birthday with Cleaning staff
தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது உள்ள தலைமுறை வரை தமிழ் சினிமா ரசிகர் நெஞ்சில் கனவு கன்னியாக நீங்காத இடம் பிடித்தவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா மட்டும் தான். சில்க் ஸ்மிதாவின் 63 வது பிறந்தநாள் இன்று அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் தினத்தை ஈரோட்டில் அவர் தீவிர ரசிகர் ஒருவர் வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை அடுத்த அகில்மேடு வீதியில் தேனீர் கடை நடத்தி வருபவர் குமார். தமிழ் திரை உலகின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் தனது கடை முழுவதும் சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்களால் அலங்கரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் இவர். இந்த ஆண்டு தனது மகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அவரது கடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு முன்பு கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 50 தூய்மை பணியாளர்களுக்கு இலவச புத்தாடைகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
சில்க் ஸ்மிதா மறைந்து பல வருடங்கள் ஆனாலும் அவரது நடிப்பும், கண்களால் கவரும் அவரது உடல் மொழியும் மறக்க முடியாத ஒன்று என குமார் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி நடிகையாக பார்க்காமல் நடிப்பாலும் திறமையாலும் இன்று வரை பலரை ஆச்சரியப்பட வைக்கும் பெண்ணாக அவர் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சில்க் ஸ்மிதா புகைப்படம் அடங்கிய காலண்டர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குமார் விநியோகம் செய்து வருகிறார். தேநீர் கடை உரிமையாளர் குமாரின் இத்தகைய செயலை இணையதள வாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Erode tea shop owner celebrate Silk Smitha birthday with Cleaning staff