சொத்துகுவிப்பு வழக்கு - ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவு.!
ex cm jayalalitha jwells and all things hand over banglore special court order in property case
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின் போது பெங்களூரு தனி நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு தெரிவித்தது. அந்த நேரத்தில் ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததை அடுத்து தீர்ப்பில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.
இதனால், சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு கோரினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும், அதை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும், அதில் இருந்து இந்த வழக்கு செலவு தொகையை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யுமாறும், ஜெயலலிதாவின் பொருட்களை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரினார்.
கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் இன்று கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
English Summary
ex cm jayalalitha jwells and all things hand over banglore special court order in property case