பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து - பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது.!
five bjp party arrested in chennai for signature issue
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. திமுக அரசு தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.
ஆனால், பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசி வருகின்றன. அதன் படி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க-வின் கையெழுத்து இயக்கம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பா.ஜ.க-வினர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதில், சில இடங்களில் மாணவர்கள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட மறுத்த நிலையில், பாஜகவினர் மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட வைத்தனர். இதேபோல், சில இடங்களில், பா.ஜ.க-வினர் மாணவர்களைக் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை காரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாயில் முன்பு, பா.ஜ.க சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. அப்போது, பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்களை பா.ஜ.க-வினர் பிஸ்கட் வழங்கி வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க-வைச் சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
five bjp party arrested in chennai for signature issue