மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? - இதோ முழு விவரம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம், இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது குறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

* கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய உயரத்தை தமிழ்நாடு அடைந்துள்ளது. நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாக குழு விழைகிறது.

* இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிடவும், உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க. நிர்வாகக் குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

* இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். அதனால் அவரை குடியரசு தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

* இந்திய நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றியது. அந்த வரிசையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனிமனித உரிமைக்கும் சவால் விடுகிறது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது.

* இலங்கை ராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

* தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும், அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ம.தி.மு.க. நிர்வாகக் குழு வரவேற்று, இதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

* தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ம் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில், ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

* மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32-வது ஆண்டு தொடக்க விழாவை மே 6-ம் தேதியிலிருந்து தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு கழகத் தோழர்களின் இல்லங்களில் கொடியேற்றுவது, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நல்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்தல் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

* தமிழ்நாடு கவர்னரை சுப்ரீம் கோர்ட்டு மிகக் கடுமையாக கண்டித்திருக்கின்ற நிலையில், அவர் கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 26-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தை எழுச்சியுடன் முன்னெடுத்து வெற்றிபெறச் செய்யுமாறு கழகத் தோழர்களை இந்த நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

full resolution of mdmk meeting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->