பழனி முருகன் கோவில் : கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 18-ந்தேதி முதல் கட்டணமில்லா முன்பதிவு துவக்கம்.!
free booking start 18th for devotes to palani murugan temple kumbabishekam
தமிழ்க்கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கு ஆன்லைன் மூலம் கட்டணமில்லா முன்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் இரண்டு ஆயிரம் பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுவர். ஆகவே, கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்கு www.palanimurugan.hrce.gov.in மற்றும் www.hrce.tn.gov.in உள்ளிட்ட இணையதளத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மூன்று நாட்கள் முன்பதிவு செய்யலாம்.
பொதுமக்கள் முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை அளித்து முன்பதிவு செய்யலாம். அதன் பின்னர் 21-ந்தேதி குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் அவர்களின் மின்னஞ்சல் வழியாகவும், செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவல் கிடைக்கப்பெற்றவர்கள் வருகிற 23 மற்றும் 24 உள்ளிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் பதிவேற்றம் செய்வதற்கு சான்றிதழ் நகலுடன் வந்து கட்டணமில்லா சீட்டை பெற்று கொள்ளலாம்.
குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வருவோருக்கு கட்டணமில்லா சீட்டு வழங்க இயலாது. இந்த சீட்டை கொண்டு படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்லலாம். மேலும், ரோப்கார், மின்இழுவை ரெயில் போன்ற சேவைகளுக்கு இந்த சீட்டு பொருந்தாது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
free booking start 18th for devotes to palani murugan temple kumbabishekam