மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்..ரங்கசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை!
If you support the three language policy people will teach you a lesson Opposition leader Siva warns Rangasamy
மும்மொழிக் கொள்கையை முதல்வர் ஆதரித்தால் புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் பேசுகையில், பெஞ்சல் புயல் நிவாரணம் ஒன்றிய அரசு கூடுதலாக கொடுக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய ரூபாய் ஐந்தாயிரம் கூட மாநில அரசுதான் கொடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது கூட ஒன்றிய அரசு அதிக நிவாரணத்தை வழங்காதது ஏன்? முழுமையாக வீடு இடிந்தவர்களுக்கும் மற்றும் புயலால் பிற பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி இதுவரை நிவாரணம் வழங்கவில்லை நாங்களும் தினமும் வருவாய்த் துறையை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார். மேலும் மும்மொழிக்கொள்கையில் உங்கள் நிலைப்பாடு என்பதை என்ன என்பதை இதுவரை வெளிப்படையாக தெரிவித்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மும்மொழி கொள்கையை ஆதரிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகவும், மும்மொழி கொள்கையில் முதலமைச்சருக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தார். இதனால் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தி மொழியை ஆதரிக்கும் புதுச்சேரி அரசின் அராஜகமான போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்க்கூறி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியாகராஜன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுச்சேரியில் திணிக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஆணவத்துடன் அமைச்சர் பதிலளித்துள்ளார். அமைச்சர் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தி இருக்கிறார். அதற்கு இரண்டு அமைச்சர்கள் வக்காளத்து வாங்கி பேசுகிறார்கள். இது சட்டமன்ற மரபை மீறும் செயல். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மக்கள் எல்லாம் ஓரணியில் நின்று எதிர்த்து வருகிறார்கள்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதிரி தேர்வில் 85 சதவீதம் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கண்டிப்பாக ஏற்கமாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை சிவப்பு கம்பளம்போட்டு வரவேற்கிறது. சமர்கசிக்ஷா திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ. 39 கோடி அளித்துள்ளது. அதன் மூலம் கல்வி மேம்பாடு ஏதும் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு இந்த அரசு எவ்வளவு தொந்தரவு கொடுக்கிறது என்பதை புதுச்சேரி மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் மொழியை மறைத்து மாற்று மொழியை மாணவர்களிடம் திணிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளார்கள். இதற்கு பெற்றோர்கள், சமூக அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் எல்லாம் எதிர்க்கிறார்கள். ஆனால் அமைச்சர் அராஜகமாக அமல்படுத்துவோம் என்கிறார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். மக்கள் ஆதரவு இல்லை என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியாளர்கள் அறிந்துள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க நினைக்கிறார்கள். முதல்வர் அவர்கள் இந்த மும்மொழிக்கொள்கையை ஆதரிக்கிறேன் என்று சொன்னால் அவருக்கும் புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.பேட்டியின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary
If you support the three language policy people will teach you a lesson Opposition leader Siva warns Rangasamy