வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் லாபி விவகாரம்.. என்ன செய்யப் போகிறார் வடக்கு மண்டல ஐஜி?
Lobby at Vellore SP office What is the North Zone IG going to do?
வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளர் பணி கடந்த இரண்டு வாரங்களாக காலியாக உள்ளது.
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நடக்கும் சம்பவங்களை எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் மூலம் முன்கூட்டியே அறிந்து சம்பவத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அறிக்கை கொடுப்பார். அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கை, முக்கிய வழக்குகளில் நிலைகள் என்று பல முக்கிய பணிகளை எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் 24 மணி நேரமும் ஆக்டிவாக கண்காணித்து வருவார். இந்த நிலையில் தான் கடந்த இரண்டு வாரமாக வேலூர் மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி காலியாக உள்ளது பல விவாதங்களை கிளப்பியுள்ளது.
வேலூர் மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கு வருவதற்கு பலர் விரும்புகின்றனர். அதே சமயம், இந்த பதவிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெரிய லாபியும் நடந்து வருகிறது. பார்த்தசாரதி, நாகராஜ், மைதிலி சீனிவாசன், காண்டீபன், விஜய் உள்ளிட்ட 10 இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கான ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ‘சொல்பேச்சு கேட்க வேண்டும், தன் சமூகமாக இருக்க வேண்டும்’ என்று குற்றப்பரிவு டி.எஸ்.பி., திருநாவுக்கரசு, காட்பாடி டி.எஸ்.பி., பழனி ஆகிய இருவரும் தனி லாபியே நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இதற்காக மண்ணின் மைந்தரும் தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத் துறை மந்திரியுமான துரைமுருகனின் பெயரையும் இரண்டு டி.எஸ்.பி.க்களும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் ராஜேஷ் கண்ணா மற்றும் மணிவண்ணன் எஸ்.பி.க்களாக இருந்தபோதும் கூட இதே திருநாவுக்கரசு மந்திரி பெயரை பயன்படுத்தி லாபி செய்திருக்கிறாராம். ஒருமுறை திருநாவுக்கரசின் லாபியை பற்றி அறிந்த மந்திரியே இவர்களை இடமாற்றம் செய்ய வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் 3 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டத்தில் திருநாவுக்கரசும் மற்ற ஒருவரும் மீண்டும் வேலூர் மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தங்களுடைய லாபியை பயன்படுத்தி மாவட்டத்தில் எந்த காவல் நிலையத்தில் யார் இருக்க வேண்டும்.., எஸ்.பி., அலுவலகத்தில் யார் இருக்க வேண்டும்.. என்று இவர்களே தீர்மானித்து வந்தாக கூறப்படுகிறது.
வேலூர் டி.எஸ்.பி.யாக திருநாவுக்கரசு பணியாற்றியுள்ளதால், வேலூர் கோட்டம் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். அந்த சமயத்தில் தான் வேலூர் டி.எஸ்.பி.யாக பிரித்விராஜ் நியமிக்கப்பட்டார். அதனால், டி.எஸ்.பி. பிரித்விராஜை செயல்பட விடாமல் திருநாவுக்கரசு நெருக்கடி கொடுத்து வந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து டி.எஸ்.பி. பிரித்விராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மதிவாணனிடம் முறையிட்ட போது அவர், ‘எதுவாக இருந்தாலும் டி.எஸ்.பி. திருநாவுக்கரசிடம் பேசிக் கொள்ளுங்கள்..’ என்று கூறியுள்ளாராம். தொடர்ந்து பல முறை முறையிட்டபோதும் இதையேதான் எஸ்.பி. மதிவாணன் கூறியிருக்கிறாராம். இதனால் அதிருப்தி அடைந்த டி.எஸ்.பி., பிரித்விராஜ் ஒரு மாதம் விடுமுறையில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் மாவட்டத்தின் புதிய எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களுக்கு வேண்டப்பட்ட நபரை கொண்டு வர வேண்டும் என்று எஸ்.பி., அலுவலகத்தில் பெரும் விவாதமே நடக்கிறதாம். மேலும், எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளராக திறமையின் காரணமாக வரப் போகிறாரா? அல்லது சிபாரிசால் வரப்போகிறாரா? என்று இன்னும் சில தினங்களில் தெரியவரும் என்று குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர் வேலூர் காவல்துறை வட்டாரத்தினர்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க், ஐபிஎஸ்., வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் யார் எந்த கோட்டத்தில் டிஎஸ்பி-யாக இருக்கிறார்கள், எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள் என உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். ஒவ்வொருவர் பற்றியும் தனது ஸ்பெஷல் டீம் மூலம் விசாரித்து இடமாறுதல் போன்றவற்றுக்கு பரிந்துரை செய்து வரும் ஐஜி அஸ்ரா கர்க், ஐபிஎஸ்., இந்த லாபியை மீறி வேலூர் மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை நியமிக்கப் போகிறாரா? அல்லது அவர்களது லாபி தேர்வு செய்யும் நபரையே நியமிக்கப்போகிறாரா? என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் குற்ற பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசை வேலூரில் இருந்து கூண்டோடு அகற்றினால் தான் வேலூர் மாவட்டமே உருப்படும் என்கின்றனர் வேலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை என்று சொன்னால் அது மிகை ஆகாது.
English Summary
Lobby at Vellore SP office What is the North Zone IG going to do?